ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கடந்த அக்டோபர் 16ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. டெல்லி திகார் சிறையில் இருந்த ப.சிதம்பரம் ஜாமீன் கோரி நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதை டெல்லி உயர்நீதி மன்றம் நிராகரித்துவிட்டது. பின்னர் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் ப.சிதம்பரத்திற்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.இதையடுத்து 106 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த பா.சிதம்பரம் ஜாமீனில் வெளியே வந்தார். இதனையடுத்து ப.சிதம்பரம் பாஜக அரசு மீது பல குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன் வைத்து பல மேடைகளில் பேசி வருகிறார்.
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில், பாஜக ஒரு கங்கை நதி போல, அதில் மூழ்கி எழுந்தால் புனிதமாகிவிடுகிறார்கள் என்று தெரிவித்து இருந்தார். அதாவது பாஜகவுடன் நெருக்கம் காட்டினால் குறிப்பிட்ட நபர் மீதான வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதை சுட்டிக்காட்டி சிதம்பரம் இவ்வாறு பேசினார். இதற்கு பதில் கொடுக்கும் வகையில் பாஜக கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறும் போது, ப.சிதம்பரம் ஊழல் வழக்கில் 106 நாட்கள் சிறையிலிருந்து வந்து எட்டு கிலோ எடை குறைந்தார். ஆனால் அவரது நா கொழுப்பு இன்னும் குறையவில்லை. மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்கல இதே போல தான் ப.சிதம்பரத்தின் நா கொழுப்பு குறையவில்லை. இன்னும் இரண்டு நாள்கள் இருந்திருந்தால் 108 நாள்கள் ஆகியிருக்கும். 108 ஒரு நல்ல எண். ஆனால், அவருக்கு அந்த புண்ணியம்கூட கிடைக்கவில்லை. ஒரு ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்தவரின் கருத்துக்கு என்னிடம் விளக்கம் கேட்பதையே நான் அவமானமாக கருதுகிறேன் என கடுமையாக விமர்சித்து பேசினார். பாஜகவின் எச்.ராஜா கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.