சமீபத்தில் சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினி கலந்து கொண்டு பேசியபோது, “1971-ல் உடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார். அன்றைக்கு அதை யாரும் துணிந்து பத்திரிகையில் பிரசுரிக்கவில்லை. ஆனால், ‘சோ’ அதை அட்டைப்படத்தில் போட்டுக் கடுமையாகக் கண்டித்தார். அதனால், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு சிக்கல் உருவானது. இதனால், துக்ளக் பத்திரிகையை சீஸ் செய்தார்கள். உடனே கொஞ்சமும் சளைக்காமல் மீண்டும் அச்சடித்து பிளாக்கில் புத்தகத்தை வெளியிட்டார். அப்புத்தகம் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனையானது. அதன் மூலம் பத்திரிகை உலகில் சோ மிகவும் பிரபலமானார்’’என்று பேசினார்.
இதனையடுத்து 1971-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி செவ்வாய்பேட்டையில் திராவிடக் கழக பேரணி நடந்த பகுதியில் பாஜகவினர் ராமர், சீதை படங்களுடன் பேரணி செல்ல முயற்சி செய்தனர். பேரணி செல்ல முயன்றவர்களை தடுத்ததால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடைபெற்றது. இதையடுத்து பேரணி செல்ல முயன்ற பாஜகவினர் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பாஜகவினர் கைது செய்யப்பட்டது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ஈ.வெ.ரா வின் ஆபாச ஊர்வலத்திற்கு அனுமதி தந்த காவல்துறை ஆன்மீக ஊர்வலத்திற்கு தடை. வெட்கக்கேடு. கடும் கண்டனத்துக்கு உரியது.