ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் எனத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தரப்பு கொந்தளித்து வருகிறது. அதிமுகவின் அனைத்து அமைச்சர்களும் அண்ணாமலையைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். தொடர்ந்து அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து பாஜகவினரும், அதிமுகவினரும் மாறிமாறி விமர்சனம் செய்து வந்தனர்.
இதனிடையே சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “பாஜகவை பொறுத்தவரை மாநில தலைவர் பதவி என்பது ஒரு பொம்மையைப் போன்றது. பொம்மையை எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். ராஜாவாகவும் வைக்கலாம். கோமாளியாகவும் வைக்க முடியும். ஜெயலலிதாவை பழித்தவர்களை சும்மா விடமாட்டோம்” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜுவை கண்டித்து கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை கிழக்கு மாவட்ட பாஜக வர்த்தகப் பிரிவு சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில், “வன்மையாக கண்டிக்கின்றோம், எங்களின் மாநில தலைவரை விமர்சிக்க தகுதியில்லாத அரசியல் கோமாளியே! தெர்மாகோல் விஞ்ஞானியே! உன்னை வன்மையாக கண்டிக்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.