நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை (தனி) தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நாகை மாலிக்கு வாக்கு கேட்டு, கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்தான், அதில் மாற்றம் இல்லை. கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய விவசாயக் கூலித் தொழிலாளர்கள் 42 பேர் உயிர் துறந்து தியாகம் செய்த நிகழ்வை அறிவோம். அதேபோலதான் டெல்லியில் விவசாயத்திற்காக, விவசாயிகளும், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் எதிரான சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி இதுவரையில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் இன்னுயிரை நீத்துள்ளனர். ஆனால் பாஜக அரசு விவசாயிகள் குறித்து எந்தக் கவலையும் கொள்ளவில்லை.
ரயில்வே, கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் யாவும் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டு வருகிறது. இதனால் வரும் இளைய தலைமுறை பெரும் பாதிப்பை அடையும், தெருக்கூத்துகளில் பின்பாட்டு பாடும் ஜால்ராக்களைப் போல பழனிசாமியும், பன்னீர்செல்வமும் பிரதமர் மோடிக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்திற்கு எந்த முன்னேற்றமும் கிடைக்கப்போவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் ‘லவ் ஜிகாத்’ என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டு, மனித உரிமை மீறப்படுகிறது. இந்த நிலை தமிழகத்திற்கு ஏற்படாமல் தடுக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.
முன்னதாக, திருக்குவளையில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி இல்லத்திற்குச் சென்று அங்கு உள்ள நூலகம் மற்றும் திருவுருவப் படங்களை அவர் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.