அத்திக்கடவு - அவினாசி திட்டப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால் வருகிற ஜனவரி மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.
ஈரோட்டில் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விவசாயிகள் ஒத்து வராததால் அந்த வேலைகளைத் துவங்காமல் நிறுத்தி வைத்திருந்தனர். நாங்கள் அந்த விவசாயிகளின் வீடு வீடாகச் சென்று அவர்களைச் சந்தித்து இதில் இருக்கும் நன்மைகள் மற்றும் தீமைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.
இதில் இருக்கும் பிரச்சனைகளைப் பேசி அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளையும் பார்த்து நாங்கள் இந்தப் பணியைத் துவங்கியுள்ளோம். இதற்கு முன்பு ஆட்சியிலிருந்தவர்கள் ஏன் விவசாயிகளைப் பார்த்துப் புரிய வைத்து இந்த வேலையைச் செய்யவில்லை.
பவானி காலிங்கராயன் தடுப்பணையில் நடைபெற்று வரும் அத்திக்கடவு - அவினாசி திட்டப் பணிகளை வரும் ஜனவரி 15-க்குள் முடிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். எனவே அத்திக்கடவு - அவினாசி திட்டப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால் வருகிற ஜனவரி மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் ” எனவும் குறிப்பிட்டார்.