கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து மக்களவை இணைச் செயலாளர் திரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சூரத் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வழங்கிய தீர்ப்பின்படி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. ராகுல் காந்தி மீதான தகுதி நீக்க நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவிக்கையில், "நாட்டு மக்கள் அனைவரும் தாமாக முன் வந்து ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து போராட வேண்டும். மேலும் நாட்டைக் காப்பாற்ற வேண்டுமானால் 130 கோடி மக்களும் முன் வர வேண்டும். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை. ஜனநாயகம் தாக்கப்படுவது தான் கவலை அளிக்கிறது. மேலும் பேசிய அவர், “சுதந்திர இந்திய வரலாற்றில் வெறும் 12வது தேர்ச்சி பெற்ற ஒரு பிரதமர் நமக்கு இருந்ததில்லை. அவ்வாறு உள்ளவரால் அரசை சரியாக நிர்வகிக்க முடியாது. ஆனால் அவருக்கு இதில் ஈகோ அதிகமாக உள்ளது. மோடியின் தலைமையில் நாடு அழிவைச் சந்தித்து வருகிறது என்று பாஜகவின் அனைத்து தலைவர்களுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தேசத்தை அழிக்க நினைப்பவர்கள் தான் பாஜகவில் இருப்பார்கள். நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்றே பாஜகவை விட்டு வெளியேற வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.