Skip to main content

‘‘அருவா மூக்கு’’ திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்! 

Published on 07/12/2020 | Edited on 07/12/2020
 ramadoss

 

 

‘‘அருவா மூக்கு’’ திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக பெய்து வரும் மழை இன்னும் ஓயாத நிலையில், மாவட்டத்தின் பெரும்பகுதியை சூழ்ந்திருக்கும் மழை - வெள்ள நீர் இன்னும் வடியவில்லை; வடிவதற்கான அறிகுறிகள் கூட இன்னும் தென்படவில்லை. கடலூர் மாவட்டம் காலம் காலமாக மழை & வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வரும் போதிலும், அதற்கு இன்று வரை நிரந்தரத் தீர்வு காணப்படாதது மிகுந்த வேதனையளிக்கிறது.

 

வங்கக்கடலில் உருவான நிவர் புயல், புரெவி புயல் ஆகிய இரு புயல்களாலும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டம் கடலூர் மாவட்டம்தான். நவம்பர் மாத இறுதியில் தாக்கிய நிவர் புயல் காரணமாக பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் சரி செய்யப்படுவதற்கு முன்பே, புரெவி புயல் பாதிப்புகள் தொடங்கி விட்டன. திசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் பெய்த மழை நேற்று சற்று ஓய்ந்திருந்தது.  ஆனால், இன்று காலை முதல் மீண்டும் அதி தீவிர கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் மாவட்டத்தின் எந்த பகுதியிலும் வெள்ளம் வடியவில்லை. 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலுமாக  துண்டிக்கப்பட்டுள்ளன. கிராமப்புற சாலைகள் முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளன. உத்தேசமாக பாதையை கணித்து தான் வாகனங்களில் செல்ல முடிகிறது.

 

மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள மக்களுக்கு முகாம்களுக்கு செல்ல விருப்பம் இல்லாததால் தங்களின் ஊர்களில் கிடைத்த இடத்தில் தங்கியுள்ளனர். சாலையோரங்களில் உள்ள கிராமங்களில் மட்டும் அரசு நிர்வாகம் சார்பிலும்,  தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் உணவு வழங்கப்படுகிறது. உட்புற கிராமங்களில் வாழும் மக்களுக்கு  உணவு கிடைப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. அத்தகைய கிராமங்களில் உள்ள மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ம.க.வினர் உணவு தயாரித்து மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

 

கடலூர் மாவட்டத்தில் அரசு தரப்பில் நிவாரணப் பணிகளும், மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு சில நாட்கள் தாமதமானாலும் கூட, இந்த பாதிப்புகளில் இருந்து கடலூர் மாவட்டம் விரைவில் மீண்டு வந்துவிடும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் புயல் மற்றும் மழையில் சிக்கி வாழ்வுக்கும், இறப்புக்கும் இடையில் போராடும் கடலூர் மாவட்ட மக்களின் துயரத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும். அதற்காக தற்காலிக நிவாரணத்தைக் கடந்து தொலைநோக்குப் பார்வையுடன் அரசு சிந்திக்க வேண்டும்.

 

கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை இரு பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். முதலாவது கடலூர் மாவட்டத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாத சூழலை உருவாக்க வேண்டும். இரண்டாவது மழை - வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு முறையும் மழை-வெள்ளத்தின் போது பாதிக்கப்படுவது  குடிசைகளில் வாழும் கிராமப்புற மக்கள் தான். நகரப்பகுதிகளில் ஓட்டு மற்றும் கான்க்ரீட் வீடுகள் கட்டப்பட்டிருப்பதால் அங்குள்ள மக்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படுவதில்லை. ஆனால், கிராமங்களில்  மழை-வெள்ளத்தின் போது குடிசைகள் முற்றிலுமாக சேதமடைந்து விடுவதால், அவர்கள் ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வர வேண்டியுள்ளது. இப்போதும் கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள கிட்டத்தட்ட அனைத்து குடிசைகளும் இப்போது சேதமடைந்து விட்டன. அதற்கு மாற்றாக மீண்டும் குடிசைகள் அமைக்க நிதி உதவி அளிப்பதற்கு பதிலாக, குடிசைகள் இல்லாத கடலூர் மாவட்டம் அமைக்கும் நோக்குடன் குடிசைகளை இழந்த அனைவருக்கும் கான்க்ரீட் வீடுகளை கட்டித் தரும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

 

கடலூர் மாவட்டத்தில்தான் கொள்ளிடம், வெள்ளாறு, கெடிலம் ஆறு, மணிமுத்தாறு, தென்பெண்ணை ஆறு ஆகிய 5 ஆறுகள் கடலில் கலக்கின்றன என்பதால் மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கடலூர் மாவட்டத்தின் பெரிய ஏரியான வீராணம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீர் உள்ளிட்டவை பெருமாள் ஏரியில் கலப்பதாலும், அதனால் பெருமாள் ஏரி நிரம்பி பரவனாற்றில் அதிக அளவு தண்ணீர்  திறந்து விடும்போது, அந்த நீர் தடையின்றி ஓட வழியில்லாததாலும் தான் பல கிராமங்களில் வெள்ளம் ஏற்படுகிறது. அதற்கு முடிவு கட்டும் வகையில் பரவனாற்று நீர் கடலில் எளிதாக கலப்பதை உறுதி செய்வதற்காக ‘‘அருவா மூக்கு’’ திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

 

பெருமாள் ஏரியில் வெள்ளம் ஏற்படுவதற்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்தான் முக்கியக் காரணம் என்பதால், அந்த ஏரியை பராமரிக்கும் பொறுப்பையும், அதற்கான செலவையும் அந்நிறுவனம்  ஏற்றுக் கொள்ள வேண்டும். கடலூர் மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் வெள்ளநீர் வடிகால்களை அமைக்க வேண்டும். இதற்காக பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர்களைக் கொண்ட குழுவை அமைத்து, அவர்களின் பரிந்துரைகளைப் பெற்று அதனடிப்படையில் சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். அந்தத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி விரைந்து செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் வெள்ளம் ஏற்பட்டாலும், அதிலிருந்து விரைவாக மீண்டு, இயல்பு நிலைக்கு திரும்பும் மாவட்டம் கடலூர் மாவட்டம் என்ற நிலையை அரசு உருவாக்க வேண்டும்” இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்