விஜயகாந்த் மைத்துனர் சுதிஷ் தனது முகநூல் பதிவாக வெளியிட்ட கார்டூன் எங்கள் ரத்தத்தை கொதிக்க செய்கிறது என கூறியுள்ளார் அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.எஸ்.சிவசங்கர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
''தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களின் மைத்துனர் சுதிஷ் தனது முகநூல் பதிவாக வெளியிட்ட கார்டூன் தி.மு.க தோழர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
எங்கள் உயிரனைய தலைவர் கலைஞர் அவர்களை அந்த கார்டூனில் சித்தரித்துள்ள விதம் ரத்தத்தை கொதிக்க செய்கிறது.
என்ன தான் விஜயகாந்த் தி.மு.கவிற்கு எதிரான தலைவராக நடந்து கொண்டாலும், தலைவர் கலைஞர் அவர்கள் மறைவின் போது அவர் வெளியிட்ட கண்ணீர் வீடியோ அஞ்சலி இன்னும் எங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. உடல் நலம் குன்றியிருந்த அந்த நேரத்திலும், தலைவர் கலைஞர் மறைவை அறிந்து, விஜயகாந்த் வெடித்து அழுத காட்சி எங்களை நெகிழ வைத்தது.
தலைவர் கலைஞர் மறைவின் போது, வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் சென்னை திரும்பிய உடனேயே, விடியற்காலை நேரத்திலேயே, விமான நிலையத்திலிருந்து நேரே தலைவர் கலைஞர் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தியதை நாங்கள் மறவோம்.
விஜயகாந்த்தின் அந்த நெகிழ்விற்கு காரணம், அவருக்கும் தலைவர் கலைஞருக்கும் இடையே நிலவிய அன்பான உறவு. விஜயகாந்த் பிரேமலதாவுடனான தனது திருமணத்தை தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடத்தினார், அந்த அளவிற்கு தலைவர் கலைஞர் மேல் அவருக்கு மரியாதை.
குடும்ப உறுப்பினர்கள் அழுத்தம் காரணமாக தலைவர் கலைஞருக்கு எதிரான அரசியலை கையில் எடுத்தார். விருப்பமில்லாமல் தான் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தார். எங்கள் தலைவர் கலைஞரை, விஜயகாந்த் கடுமையாக விமர்சித்திருந்தாலும், அவரது மறைவின் போது விஜயகாந்தின் உள்ளம் வெளிப்பட்டது.
அப்படிப்பட்ட விஜயகாந்தின் மைத்துனராக இருந்து கொண்டு, சுதிஷ் அந்த கார்டூனை பகிர்ந்திருப்பது அவரது குணத்தை வெளிப்படுத்துகிறது. விஜயகாந்த் அவர்கள் நல்ல உடல் நலத்தோடு இருந்திருந்தால், நிச்சயம் சுதிஷை கடுமையாக கண்டித்திருப்பார்.
இந்த ஆண்டு விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளின் போது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், "தலைவர் கலைஞரின் குறையாத பாசத்திற்குப் பாத்திரமாகத் திகழ்ந்தவரும், எனது இனிய அன்பு நண்பரும், தேமுதிக தலைவருமான 'கேப்டன்' விஜயகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் " என்று வாழ்த்தினார்.
அந்த வாழ்த்தில், "தலைவர் கலைஞரின் குறையாத பாசத்திற்குப் பாத்திரமாகத் திகழ்ந்தவரும்" என்ற வாசகம் கூர்ந்து கவனிக்கத்தக்கது.
அந்த தலைவர் கலைஞரை தரக்குறைவாக சித்தரித்திருக்கும் கார்ட்டூனை பகிர்ந்ததற்கு தி.மு.க தோழர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் பிறகு அந்த கார்டூனை நீக்கி விளக்கம் அளித்திருக்கிறார்.
இதை போன்ற கார்ட்டூன்களை வெளியிடுவது தான் சிலரின் தரம். அதை பகிர்ந்ததன் மூலம் சுதீஷ் அதே தரம் தான் தானும் என கூறுகிறாரா?'' இவ்வாறு கூறியுள்ளார்.