டெல்லி சட்டமன்றத்தின் மூன்று நாள் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத்தில் டெல்லி அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அடிஷி கவன ஈர்ப்புத் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
அந்தத் தீர்மானம் மீது நடந்த விவாதத்தில், “ஆளுநர் நம் தலை மீது அமர்ந்துள்ளார். எனது ஆசிரியர் கூட எனது வீட்டுப் பாடங்களை இந்த அளவுக்கு ஆய்வு செய்ததில்லை. ஆளுநர் எனது கோப்புகளை அந்த அளவிற்கு ஆய்வு செய்கிறார். ஆளுநர் எனக்கு தலைமை ஆசிரியர் அல்ல. என்னை முதலமைச்சராகத் தேர்வு செய்தது மக்கள்.
ஆளுநர் வி.கே.சக்சேனா, டெல்லி அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்ததைத் தடுத்து நிறுத்தினார். பள்ளி மாணவர்களின் வாழ்க்கையுடன் ஆளுநர் சக்சேனா விளையாடுகிறார். ஆளுநரைப் போன்றவர்களால் தான் நாடு பின்தங்கியுள்ளது.
ஒருமுறை நான் ஆளுநரைச் சந்தித்த போது, தன்னால் தான் பாஜக டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக 104 வார்டுகளைக் கைப்பற்றியது என்றும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என்றும் கூறினார். மத்தியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் ஆளுநர் நிலை என்பது என்ன ஆகும்.
தற்போது காலணியாட்சி நடக்கவில்லை. மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி நடக்கிறது. பிரிட்டிஷ் காலத்தில் இருந்த வைஸ்ராய்க்களைப் போல ஆளுநர் நடந்து கொள்கிறார். டெல்லி ஆளுநருக்கு உள்ள அதிகாரம் பற்றி உச்சநீதிமன்றம் தெளிவாகச் சுட்டிக்காட்டிய பிறகும் இதுபோன்ற பிரச்சனைகள் நீடிக்கிறது” எனக் கூறினார்.