தமிழக சட்டமன்ற சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோரை தேர்வு செய்யவும், எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்கவும் சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தைக் கூட்டியிருந்தார் கவர்னர் பன்வாரிலால். சபாநாயகராக அப்பாவுவும், துணை சபாநாயகராக பிச்சாண்டியும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனையடுத்து, மறுதேதி குறிப்பிடாமல் சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதற்காக, இந்த மாதத்தில் சட்டமன்றத்தைக் கூட்டுவதற்கு முடிவு செய்திருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இதுகுறித்த ஆலோசனைகள் கோட்டையில் நடந்துவருகிறது. தற்போது, கரோனா கட்டுப்பாடுகளால் தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கு ஜூன் 7ஆம் தேதி காலைவரை அமலில் இருக்கும் நிலையில், அதன்பிறகே சட்டமன்றம் கூட்டப்படும் என்கிறார்கள். ஊரடங்கை மீண்டும் நீட்டிக்க விருப்பமில்லை என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லிவருவதால், அனேகமாக ஜூன் 15ஆம் தேதிக்குப் பிறகு சட்டமன்றம் கூட்டப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய ஆட்சி பொறுப்பேற்றதும் கூடும் முதல் கூட்டத்திலும், வருடத்தின் முதல் கூட்டத்திலும் கவர்னர் உரை நிகழ்த்துவது மரபு. அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான முதல் கூட்டத்தொடரின் முதல் நாளில், கவர்னர் பன்வாரிலால் உரை நிகழ்த்துவார். புதிய ஆட்சி எதிர்கொள்ளும் நிதி நிலைமைகள் குறித்து தனது உரையில் குறிப்பிடுவார் என்று சொல்லப்படுகிறது.
கவர்னர் உரைக்குப் பிறகு அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சிகளின் சட்டமன்ற தலைவர்கள் பேசுவர். இறுதியில், அவர்களுக்கு நன்றி தெரிவித்து பதிலுரையாற்றுவார் முதல்வர் ஸ்டாலின். இதனையடுத்து, ஓரிரு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
இந்தக் கூட்டத்தொடரில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக அரசு விட்டுச்சென்ற கடன் சுமை குறித்தும், அரசு கஜானா காலியான நிலையில் பொறுப்பேற்ற திமுக ஆட்சியின் நிர்வாகச் சூழலையும் சுட்டிக்காட்டி மு.க. ஸ்டாலின் நீண்ட உரையாற்றவிருக்கிறார். மேலும், நீட் தேர்வுக்கு விலக்களிப்பது அல்லது அதனை ரத்து செய்வது என்கிற சட்ட மசோதா தாக்கல் ஆகும் என பேரவை வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.