Skip to main content

அதிமுக - அண்ணாமலை இடையே மீண்டும் மோதல்

Published on 17/09/2023 | Edited on 17/09/2023

 

Another issue between AIADMK and Annamalai

 

பேரறிஞர் அண்ணாவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்தி பேசியதாக கூறி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ போன்றவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

அந்த வகையில் விழுப்புரத்தில் நேற்று அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், "பேரறிஞர் அண்ணா இல்லையென்றால் தமிழகம் இல்லை. ஆறு சதவீத மக்கள் மட்டுமே நாட்டை ஆண்டிருப்பார்கள். மீதம் உள்ள 93% தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிறபடுத்தப்பப்பட்ட மக்கள் இன்றைக்கு கூலித் தொழிலாளியாக இருந்திருப்போம். இன்றைக்கு தமிழகம் முன்னேறி இருப்பதற்கு காரணம் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா. ஆனால் இந்த சரித்திரம் தெரியாமல் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான், இன்றைக்கு புதிது புதிதாக எல்லாம் தலைவர்கள் வந்துள்ளார்கள். அண்ணாமலை அண்ணாவை விமர்சனம் செய்து பேசியதுடன் தரக்குறைவாகவும் பேசி உள்ளார்.

 

அண்ணாமலையின் வயது 40 கூட இன்னும் முடியவில்லை. அண்ணாமலை சொல்லும் சம்பவம் 1951 இல் மதுரையில் பேசியதாக கூறி உள்ளீர்கள். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ, என்று உங்களை நீங்களே அறிவுஜீவியாக நினைத்துக்கொண்டு எல்லாம் தெரியும் என பேசி உள்ளார். முன்பு ஜெயலலிதாவை விமர்சனம் செய்தார். இன்றைக்கு அண்ணாவை விமர்சனம் செய்துள்ளார். அண்ணாமலையின் செயல்பாடு கூட்டணி தர்மத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது. அண்ணா பற்றி அண்ணாமலைக்கு என்ன தெரியும். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறக் கூடாது என அண்ணாமலை திட்டமிடுகிறாரோ என சந்தேகம் வருகிறது. திமுக உடன் கைகோர்த்து அண்ணாமலை செயல்படுகிறாரோ. அண்ணாமலை செல்வது பாதயாத்திரையா, வசூல் யாத்திரையா எனத் தெரியவில்லை. தன்னுடைய இருப்பைக் காட்ட இதுபோல் செயல்படுகிறார். அண்ணாமலை இது உங்களுக்கு இறுதி எச்சரிக்கை. இனியும் தொடர்ந்தால் அதிமுக தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்" என பேசி இருந்தார்.

 

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இது குறித்து பேசுகையில், “போலீஸ்காரனை பார்த்தால் திருடனுக்கு தேள் கொட்டுவது சகஜம் தான். வசூல் செய்து அமைச்சர்களாக இருந்தவர்கள் அனைத்தையும் வசூலாக தான் பார்க்கிறார்கள். அவர்கள் அமைச்சராக இருந்ததே வசூல் செய்யத்தான். அதனால், நான் நடைபயணம் செல்வது வசூல் செய்யத்தான் என நினைக்கிறார்கள். அந்த டிஎன்ஏவை மாற்ற முடியாது. வசூல் செய்து அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு நேர்மையின் அர்த்தம் தெரியாது. நல்ல போலீஸை பார்த்தால் திருடனுக்கு தேள் கொட்டியது போலத்தான் இருக்கும். நான் யாருடைய அடிமையும் கிடையாது. கும்பிடு போட்டுக்கொண்டு அவர்கள் கூறுவதை கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சுயமரியாதை உள்ள கட்சி பாஜக, கூட்டணியில் இருப்பதால் அடிமையாக இருக்க முடியாது. என்னை செருப்பால் அடித்தால் கூட பொறுத்துக்கொள்வேன். ஆனால் எனது நேர்மையை குறை சொன்னால் சும்மா விட மாட்டேன். இந்த தலைவர் பாஜகவின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்பட்டு பேசுகிறார்.

 

கடும் சொற்களை எனக்கும் பயன்படுத்தத் தெரியும். சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். அதைப் பற்றி எல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. 10 ஆண்டுகளாக காவல்துறையில் துப்பாக்கி பிடித்த கை இது. நேர்மையாக இருப்பவன் நான். சி.வி. சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது. சில தலைவர்களுக்கு கள அரசியல் மாறிவிட்டது என புரிய வைக்க இன்னும் 10 ஆண்டுகள் வேண்டும்" என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்