தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 25 ஆம் தேதி (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்து சென்றதற்கான காரணம் குறித்தும், இதனால் பாஜகவிற்கு ஏற்படும் விளைவு பற்றியும், தமிழ்நாட்டில் அதிமுக இன்றி பாஜக கூட்டணி அமைக்க முடியுமா என்றும், பாஜக மேலிடத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையில் அண்ணாமலைக்கும் - அதிமுகவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லப்பட்டது.
இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பிறகு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்து பேசினார். அதே சமயம் நாளையும் அமித்ஷாவை சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இன்று மாலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது நிர்மலா சீதாராமன் அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கான காரணம் குறித்து கூடுதல் தகவல்கள் மற்றும் விளக்கங்களை அண்ணாமலையிடம் இருந்து பெற்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை நாளையும் பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து பேச உள்ளதால் அண்ணாமலை தலைமையில் நாளை நடைபெற இருந்த தமிழக பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.