பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பேரறிஞர் அண்ணாவை கொச்சைப்படுத்துவது போன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தொண்டர்கள் கொதித்தெழுந்திருக்கின்றனர். அண்ணாமலையை பொறுத்தவரையில், தனது கட்சியை வளர்க்க எப்படி வேண்டுமென்றாலும் பேசட்டும். மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவதை கைவிட வேண்டும். ஏற்கனவே ஜெயலலிதாவைப் பற்றி விமர்சனம் செய்து, அதன் பின்னர் கடும் கண்டனங்கள் எழுந்ததால், திரும்பவும் அண்ணாமலை மன்னிப்பு கேட்டார்.
மறைந்த பேரறிஞர் அண்ணா இன்று இல்லை என்றாலும் உலகத் தமிழர்களால் போற்றப்படக்கூடிய மாபெரும் தலைவர். அவரைக் கொச்சைப்படுத்தும் விதமாக நடக்காத சம்பவம் ஒன்றை நடந்ததாக கருத்து தெரிவிக்கிறார். முத்துராமலிங்க தேவரும், அண்ணாவும் நெருங்கிய நண்பர்கள். திடீரென்று வந்து அண்ணாவைப் பற்றி அண்ணாமலை கருத்து சொன்னால் நிச்சயமாக எந்த தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். அண்ணாவைப் பற்றி அண்ணாமலை சொன்ன கருத்துக்கு அதிமுக சார்பில் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து இது போன்று பேசினால் அண்ணாமலைக்கு தக்க பதிலடி கொடுக்கும் சூழல் ஏற்படும். மறைந்த தலைவர்களை பற்றி கொச்சைப்படுத்தி பேசக்கூடாது. அண்ணாமலை பக்கத்தில் இருந்து பார்த்ததை போன்று நடக்காத விசயத்தை எப்படி சொல்ல முடியும்.” என பேசினார்.