தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் எல்.முருகன், மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நான்கு மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சரவையை மாற்றியமைத்தார் பிரதமர் மோடி. அந்த மாற்றத்தின்போது, தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகன், மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதற்காக பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார் எல். முருகன்.
லோக்சபா அல்லது ராஜ்யசபா எம்.பி.யாக முருகன் இல்லாத நிலையில், அடுத்த 6 மாதத்துக்குள் அவர் எம்.பி.யாக வேண்டும். இந்நிலையில், தமிழ்நாடு அல்லது புதுச்சேரியிலிருந்து ராஜ்யசபா இடத்துக்கு எல்.முருகன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சொல்லப்பட்டது. இதற்காக பல அரசியல் முயற்சிகளை எடுத்தது பாஜக தலைமை. ஆனால், அவை சாத்தியப்படவில்லை.
இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 இடங்களுக்கும், அசாம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள தலா 1 இடத்துக்கும் அக்டோபர் 4ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லை என்கிற நிலையில், மத்தியப் பிரதேசத்திலிருந்து எல்.முருகனை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான முடிவை பாஜக தேசிய தலைமை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. அண்மையில் அவர் மத்தியப் பிரதேசத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், தற்பொழுது அவர் மாநிலங்களவை எம்.பி ஆக போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.