சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க. தேர்தல் சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 1ஆம் தேதி நடைபெற்றது. கூட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழுவில் பேசிய அன்புமணி ராமதாஸ், சட்டமன்ற தேர்தலில் கூட்டணி உண்டா?. இல்லையா?. யாருடன் கூட்டணி? என்பதை தேர்தலுக்கு முன்பாக ராமதாஸ் அறிவிப்பார். ஏப்ரல் மாதம் நடக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள். தகுதியானவர்களுக்கு சீட் கொடுங்கள். பலமான இடத்தை விட்டு கொடுக்காதீர்கள். மக்களின் ஆதரவு நமக்கு உள்ளது.
தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்பதுதான் நமது இலக்கு. அதற்கு ஆட்சி அதிகாரம் இருந்தால் எளிதில் செய்து முடிக்க முடியும். வளர்ச்சியை நோக்கி பயணிக்கின்ற ஒரே கட்சி பா.ம.க.தான். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஒரு அச்சமும் தேவை இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.