நாடாளுமன்றத் தேர்தல் திருவிழா தொடங்கியுள்ள நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிகள் பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடுகள் முடிந்துள்ள நிலையில் அமமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.
தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி தங்கள் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்துள்ளார் தினகரன். அதிமுகவில் சசிகலா குடும்பத்தை பிடிக்காதவர்கள் பிடித்தவர்கள் என்று ஒதுங்கும் போது தினகரனுடன் ஒரு கூட்டம் வந்தாலும் தஞ்சை மா.செ வைத்திலிங்கத்தை பிடிக்காமல் வெளியேறி அமமுகவில் இணைந்தவர்கள் அதிகம். அந்த வகையில் தான் தஞ்சை நகரில் மட்டுமின்றி கும்பகோணம், சென்னை வரை கல்வி நிறுவனங்களை நடத்தும் பிஆர்சி முருகேசனை வேட்பாளராக அறிவித்துள்ளார்.
மன்னார்குடி பகுதியை சேர்ந்த முருகேசன் தஞ்சையில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்று கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, மருத்துவ துணைப்படிப்புகளுக்கான கல்லூரிகளை நடத்தி வருகிறார். அதிகமான கல்வி நிறுவனங்கள் இருப்பதால் தனி பல்கலைக்கழகமாக உருவாக்கினார். பல்கலைக்கழக அனுமதிக்காக பணத்துடன் டெல்லி சென்று திரும்பியவர் பிடிபட்டு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் அதிமுக வில் தொடர்ந்து வாய்ப்பு கேட்டு வந்தவருக்கு தற்போது அமமுக வில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவருக்கு பணம் ஒரு தடையில்லை. ஒவ்வொரு வருடமும் அனுமதி பெறாத வகுப்புகளை நடத்தி தேர்வு நேரத்தில் மாணவர்களை போராட வைப்பதும் நீதி மன்றத்திற்கு அனுப்பி தேர்வுக்கான அனுமதி பெறுவதுமான சர்ச்சைகள் இவர் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.