கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக தலைமை அலுவலகத்தை திறந்து வைக்க பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று காலை கிருஷ்ணகிரி வந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் பாஜக தலைமை அலுவலகத்தை திறந்து வைத்த ஜே.பி.நட்டா, அங்கிருந்து காணொளி மூலம் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் கட்டப்பட்ட மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார். தமிழகத்தில் திருச்சி, விருதுநகர் உட்பட 9 மாவட்டங்களில் இன்று முதல் பாஜக தலைமை அலுவலகங்கள் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வருகிறது. மேலும் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பாஜக தலைமை அலுவலகங்கள் கட்டப்பட்டு வருவதாக பாஜக மாநில துணைத் தலைவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். தொடர்ந்து கிருஷ்ணகிரியில் பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். இந்நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய ஜே.பி. நட்டா, “தமிழ்நாட்டின் வளர்ச்சியும் தமிழகத்தின் எதிர்காலமும் சிறக்க வேண்டுமானால் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே சாத்தியமாகும். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 60 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் இந்த மாநிலத்தை ஆட்சி செய்தது. ஆனால் காங்கிரஸ் அதன்பிறகு ஆட்சிக்கு வர முடியவில்லை. ஏனென்றால், அவர்கள் பிராந்திய சிக்கல்களுக்கு மதிப்பளிக்கவில்லை. அதனால் தான் காங்கிரஸ் வெல்லவில்லை. அதன்பிறகு பிராந்திய கட்சிகள் ஆட்சிக்கு வந்தது. ஆனால், பிராந்திய கட்சிகள் அனைத்தும் குடும்ப கட்சிகளாக ஆகிவிட்டது. பிராந்திய கட்சிகளோ பிராந்திய சிக்கல்களுக்காக இருக்காமல் அவர்கள் குடும்பத்திற்காகவே இருக்கின்றன.
இந்திய அரசியல் குடும்பங்களுக்கானதல்ல. தமிழ்நாட்டில் சிறப்பான நல்ல ஆட்சியை கொடுக்க முடியுமானால் அது பாஜகவால் மட்டுமே முடியும். தமிழகத்தில் தாமரை மலரப் போகிறது. நான் உங்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். நாளை என்பது உங்களுக்கானது. சமூகத்தின் அனைத்து விளிம்புகளுக்கும் சென்று முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்யுங்கள். அனைத்து மக்களுக்கும் சேவை செய்யுங்கள். பாஜக மக்களின் குரலாக மாற வேண்டும். எனது கோரிக்கை என்பது அதுதான்” எனக் கூறியுள்ளார்.