திமுகவை தமிழகத்தில் வீழ்த்த வேண்டும் என்றால் பெரிய கூட்டணி வைத்துத் தான் செயல்பட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாங்கள் இணையமாட்டோம். ஆனால் நான் இன்றும் சொல்கிறேன். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களாகத் தன்னை நினைப்பவர்கள் எங்கு இருந்தாலும் ஓர் அணியில் சேர்ந்து கூட்டணிக் கட்சிகளோடும் தேசியக் கட்சிகளோடும் சேர்ந்து தேர்தலைச் சந்தித்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும். நான் எதார்த்தத்தை உண்மையைச் சொல்கிறேன்.
திமுகவை தமிழகத்தில் வீழ்த்த வேண்டும் என்றால் பெரிய கூட்டணி வைத்துத் தான் செயல்பட வேண்டும். கூட்டணிக்கு ஈபிஎஸ் வரமாட்டார் எனச் சொல்லுகிறார்கள். நான் ஈபிஎஸ்-ஐ சொல்லவில்லை. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களைத் தான் சொன்னேன். ஈபிஎஸ் ஜெ.வின் தொண்டர் இல்லை என்பதை அவர் நிரூபிக்கிறார். அதைப் பற்றி நான் பேச வேண்டிய அவசியம் இல்லையே” எனக் கூறினார்.