சீர்காழி தாலுகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.
சீர்காழி தாலுகா பகுதியில் கடந்த 11 ஆம் தேதி அதீத கனமழை பெய்தது. இதன் காரணமாக சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகபட்ச மழை அளவு பதிவானது. சீர்காழியில் 44 சென்டிமீட்டர், கொள்ளிடத்தில் 32 சென்டிமீட்டர் மழை அளவு பதிவானது. இதனால் சீர்காழி தாலுகா பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிப்படைந்தது. இந்தப் பாதிப்புகள் குறித்து பார்வையிடவும் நிவாரணம் வழங்கவும் பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வந்தார்.
கொள்ளிடம் ஒன்றியம் கொடிக்கால்வெளி கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட 120 குடியிருப்புகளையும், குறிப்பாக இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் உட்பகுந்து வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பாதிக்கப்பட்டிருந்த வீடுகளைப் பார்வையிட்டார். அங்குள்ள மக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, நூறு பேருக்கு அரிசி, காய்கறி, போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.
அங்கிருந்து நல்லூர், அகரவட்டாரம், வேட்டங்குடி பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட விவசாய விளைநிலங்களில் தேங்கியுள்ள மழைநீரை பார்வையிட்டார். அங்கு விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அங்கிருந்து திருவெண்காடு, ராதாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பூம்புகார் மீனவ கிராமத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் பார்வையிட்டார்.
இதனிடையே, ராதாநல்லூர் கிராமத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தவர், “தமிழக அரசின், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது எந்த வகையிலும் போதாது. ஐயாயிரம் ரூபாயாக வழங்க வேண்டும். மேலும் எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தபோது பயிர்கள் பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். ஆனால், தற்பொழுது பத்தாயிரம் ரூபாய் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். வேலையில்லாமல் உள்ள குடும்பங்களுக்கு 30 நாட்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், எடப்பாடி பழனிச்சாமியை சென்னை வந்த உள்துறை அமைச்சர் சந்திக்காதது பற்றி கேட்டதற்கு, “பிரதமரையோ உள்துறை அமைச்சரையோ சாதாரண மக்கள் கூட யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிதம்பரத்தில் பேருந்து எறிந்தது. அதற்கு தமிழக அரசு கொடுத்த பதில் திருப்திகரமாக இல்லை. முறையாக விசாரணை செய்ய வேண்டும். பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கால நீட்டிப்பு செய்ய வேண்டும். இதற்காக கருப்பு முருகானந்தம் தலைமையில் ஒரு குழு அமைத்து டெல்லி சென்று இரண்டு நாட்களில் நிதி அமைச்சரையும், வேளாண் துறை அமைச்சரையும் சந்தித்து முறையிட உள்ளனர்” என்றார்.
‘2024-ல் மெகா கூட்டணி அமையும். அதில் டிடிவி தினகரனுக்கு ஒரு சதவீதம் கூட இடமில்லை’ என எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார் என்பது குறித்துக் கேட்டதற்கு, “இது தொடர்பாக கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. எடப்பாடி இங்கு வந்திருக்கிறார்கள். பத்திரிகை நண்பர்களைச் சந்தித்துள்ளார்கள். குறிப்பாக இன்னொரு கட்சியைப் பற்றி பேசி உள்ளார்கள். இதுகுறித்து விளக்கம் கேட்க வேண்டியது எடப்பாடியிடம்.
முதலமைச்சர் அறிவித்துள்ள நிவாரணத் தொகை அனைத்தும் மத்திய அரசு கொடுக்கின்ற நிதியிலிருந்து வருகிறது. எனவே, மத்திய அரசு கொடுக்கின்ற நிதியோடு மாநில அரசும் சேர்த்து கூடுதலாக கொடுக்க வேண்டும்” என்று பேசினார்.