அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சனை கடந்த சில மாதங்களாக இருந்து வருகிறது. கடந்த ஜூன் 23ம் தேதி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையில் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. மேலும், எடப்பாடிக்கு அதிமுகவில் அதிக ஆதரவு இருந்ததால் ஓபிஎஸ் வெளியேறும் படியும் அவருக்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டன.
அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அந்த பொதுக்குழுக் கூட்டத்திலிருந்து தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார். அதன் பின் அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடக்கும் என அந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு ஜூலை 11ம் தேதி காலை அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 11ம் தேதி காலை இபிஎஸ் தரப்பில் பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்ட நிலையில் பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட அதிமுகவினர் அதிக அளவில் பொதுக்குழு கூட்டம் கூடும் இடத்தில் குழுமி இருந்தனர். அந்தநிலையில், தீர்ப்பு வர சில நிமிடங்களுக்கு முன்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தினுள் அத்துமீறி பூட்டை உடைத்து. உள்ளே சென்றனர். அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ்-ம் தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.
அதே சமயம் அதிமுக அலுவலகத்தில் ஓபிஸ், இபிஎஸ் தரப்பினர் ஒருவரை ஒருவர் கடுமையா தாக்கி கொண்டனர் இதனை அடுத்து அங்கு விரைந்த வட்டாட்சியர் கலவரத்தைத் தடுக்கும் பொருட்டு ஓபிஸ், இபிஎஸ் ஆதரவாளர்களை வெளியேற்றி அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தார். கலவரம் தொடர்பாக சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவாகின. இந்நிலையில் அதிமுக அலுவலக கலவரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.