பல்வேறு முட்டல் மோதல்களுக்கு பிறகு கடந்த 11 ஆம் தேதி வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி நீக்க, மறுபுறம் எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்களை ஓபிஎஸ் நீக்கி வருகிறார். அதேபோல் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான வழக்கும் உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமி நடத்தியது பொதுக்குழுக்கூட்டம் அல்ல பொய்க்கூட்டம் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ''பூனை கண்ணை மூடினால் உலகமே இருட்டுனு நினைக்குமாம் அதுதான் அவர் கதை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகுத்த சட்டத்தின் அடிப்படையில் அதிமுகவை குன்றாமல், குறையாமல் எடப்பாடி பழனிசாமி வளர்ச்சிப் பாதையில் எடுத்து செல்வதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார். இது உயர்நீதிமன்றத்தால், உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறது .அதிமுக தொண்டர்கள் எந்த காலத்திலும் எந்த சோதனையிலும் தடம் மாறாதவர்கள். அவர்களின் ஆதரவோடுதான் அதிமுக வீறு நடை போடுகிறது'' என்றார்.