அதிமுக காலத்தில் நடைபெற்ற திட்டங்கள் குறித்து உருவாக்கப்பட்ட கல்வெட்டுகள் உடைக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். சென்னை ராயப்பேட்டையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “வேளாண் பட்ஜெட் பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமி தமிழக விவசாயிகளின் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் வேளாண் வளர்ச்சி, விவசாயிகள் நலன், இவை முக்கியமாக கருத வேண்டிய விஷயம். இவை இரண்டும் இல்லை. அரைத்த மாவையே அரைத்தது போல் உள்ளது. கொள்கை விளக்கக் குறிப்பில் என்ன உள்ளதோ அதுதான் வேளாண் பட்ஜெட்டிலும் உள்ளது. விவசாயிகள் நலன் மற்றும் வேளாண் வளர்ச்சி சார்ந்த திட்டங்கள் எதுவும் இல்லை. இது அம்மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். தோட்டக்கலை பயிர்கள் விளைச்சல் அதிகமாகும் போது விலை குறையும். அப்பொழுது காய்கறிகளுக்கு ஆதார விலை கிடையாது. விளைபொருட்களுக்கு அடிப்படையான ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு. ஆனால் முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்திய பின்னும் ஆதார விலை நிர்ணயிக்காதது விவசாயிகளுக்கு ஏமாற்றமாகவே உள்ளது.
உழி மற்றும் சுத்தியலை எடுத்துக்கொண்டு ஜெயக்குமார் கல்வெட்டு எங்கே இருக்கிறது எனத் தேடி தேடி உடைத்துக்கொண்டு உள்ளார்கள். கல்வெட்டை எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் மக்கள் மனதில் உள்ள என் பெயரை எடுத்துவிட முடியுமா. கல்வெட்டை போட்டு உடையுங்கள். ஆனால் காலச்சக்கரம் சுழலும். நீங்கள் எதையும் செய்யப்போவது இல்லை. அதனால் தைரியமாக உடைக்கிறீர்கள். தப்பித் தவறி எங்கள் கண்ணில் உங்கள் கல்வெட்டுகள் எதாவது மாட்டினால் இதே நிலைமை தான் உங்களுக்கும் வரும். அதையும் சொல்கிறேன். ஒரு கல்வெட்டு கூட இருக்காது” எனக் காட்டமாக பேசினார்.