
அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2 ஆவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் கடந்த ஜூலை மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் மூன்றாவது இரண்டு நாள் கூட்டம் நேற்று தொடங்கியது. நேற்று மும்பையில் நடந்த கூட்டத்தில் 28 கட்சிகளைச் சேர்ந்த 65 தலைவர்கள் கலந்து கொண்டனர். இன்று இரண்டாவது நாள் கூட்டம் தொடங்கிய நிலையில், பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். கூட்டத்தில் தமிழக முதல்வர் பேசுகையில், ''ஜனநாயகத்தை காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கிற்கு முன் பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 'இந்தியா' கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு ஒளிமயமான ஆண்டாக அமைய இருக்கிறது. எதேச்சதிகார ஆட்சி முடிந்து மக்களாட்சி மலரத் தேவையான கொள்கையால் நம்மை அடையாளப்படுத்த வேண்டும்.

பாஜகவுக்கு எதிரான கட்சிகளை முடிந்தவரை இந்தியா கூட்டணியில் சேர்த்தாக வேண்டும். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் அரசை ஒன்றியத்தில் அமைப்பதே நமது அணியின் நோக்கம். ஒருங்கிணைப்பு குழு, குறைந்தபட்ச செயல் திட்டத்தை உடனடியாக உருவாக்க வேண்டும். இந்தியா என்ற பெயரே பாஜகவிற்கு பயத்தையும் காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது. எதிர்க்கட்சிக் கூட்டணியைக் கொச்சைப்படுத்தி பேசுவதையே பாஜகவினர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். நமது நாட்டை பாஜக ஆட்சி பல்வேறு வகைகளில் சீரழித்துள்ளது. சீரழிவை எப்படி சரி செய்யப் போகிறோம் என்பதை நாட்டு மக்களுக்கு நாம் சொல்ல வேண்டும்'' என்றார்.