அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய தேர்தல் ஆணையம் 10 நாட்கள் கால அவகாசம் கோரி இருந்தது. டெல்லி உயர்நீதிமன்றம் நிர்ணயித்திருந்த காலக்கெடு நாளையுடன் நிறைவு பெறுவதால் இன்று இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது. தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ள நிலையில் இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “இன்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தின் தீர்ப்பை அங்கீகரித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி பின்னால் அதிமுக நிர்வாகிகள் நிற்கிறார்கள். அதன் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இப்போது தேர்தல் ஆணையமும் அதனை அங்கீகரித்துள்ளது. தேர்தல் ஆணையம் அங்கீகரித்தாலும் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சொல்கிறார்கள். தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பின் கட்சி முழுமையாக எடப்பாடி பழனிசாமி பின்னால் இருக்கிறது. அதிமுக குறித்தான வழக்குகள் எந்த நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும் பழனிசாமிக்கு சாதகமாக வரும்” எனக் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “தேர்தல் ஆணையத்தின் இந்த அங்கீகாரம் எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. 2024 மற்றும் 2026 என இரு தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் சாதகமாக அமைந்துள்ளது” எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், “தேர்தல் ஆணையத்தின்படி பெயரை, கட்சியை, சின்னத்தை வேறு யாரும் உரிமை கோரவோ பயன்படுத்தவோ முடியாது. அப்படி அவர்கள் சொன்னாலும் அது செல்லாது. இனிமேல் ஓபிஎஸ் பயன்படுத்தினால் வழக்கு பாயும். ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பு எம்.எல்.ஏக்கள் காரில் அதிமுக கொடி கட்டி வருகிறார்களாம் நாளை கட்டிட்டு வராங்களானு பாருங்க. இதற்கும் மேல் கொடி கட்டினால் சசிகலா ஓபிஎஸ் என யார் பயன்படுத்தினாலும் வழக்கு தொடுப்போம்” எனக் கூறினார்.