நாகை மட்டுமின்றி தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி விமான நிலையம் அமைக்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவிட்ட அதிமுக வேட்பாளரின் பேச்சைக் கேட்டு கூட்டணிக் கட்சியினர் அதிர்ந்துத்தான் போனார்கள்.
நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சமீபத்தில் அதிமுகவில் இணைந்த தலைஞாயிரைச் சேர்ந்த சுர்ஜித் சங்கர் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அதிமுக தலைமைக் கழகத்தால் வேட்பாளர் சுர்ஜித் சங்கர் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர் அறிமுக கூட்டம் நாகை அதிமுக கட்சி அலுவலகத்தில் நடந்தது. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் நடைபெற்ற அறிமுக கூட்டத்தில், எஸ்.டி.பி.ஐ, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், அதிமுக தொண்டர்கள் எனப் பலரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
கூட்டத்தில் பேசிய அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர், "விவசாயிகளும், மீனவர்களும் எனது இரு கண்கள். அவர்களின் நலனுக்காக பாடுபடுவேன். கடல் கொள்ளையர்கள், இலங்கை ராணுவத்தால் பாதிக்கப்படும் மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண பாடுபடுவேன்" என்றவர். மேலும் பேசியவர், "நான் வெற்றி பெற்றால் நாகை மாவட்டத்தில் தனி விமான நிலையம் அமைக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியே சிறு விமான நிலையங்கள் அமைக்கப்படும்." என்றும் வாக்குறுதியளித்தார். நாகையில் விமான நிலையம் கொண்டு வருவேன் என அதிமுக வேட்பாளர் பேசியதால் கூட்டணிக் கட்சியினரே அதிர்ந்துள்ளனர்.