![AIADMK campaign; Another problem for Panneerselvam's side](http://image.nakkheeran.in/cdn/farfuture/vRZVUVHft40tUx5WCDFau3D4nyV4vyRkwsZTX4gu5V4/1675835899/sites/default/files/inline-images/864_2.jpg)
ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் பிப் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசை சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். பொதுக்குழு வழக்கு காரணமாக அதிமுகவில் வேட்பாளரை இறுதி செய்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒரு வழியாக அதிமுகவின் வேட்பாளர் இறுதி செய்யப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஓரிரு தினங்கள் முன் திமுக, அதிமுக, நாம் தமிழர், தேமுதிக கட்சிகளின் சார்பில் நட்சத்திர பேச்சாளர் பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டது. திமுக சார்பில் கொடுக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் முதல்வர் ஸ்டாலின், துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், எம்.பி.கனிமொழி என 40 பேரின் பெயர்கள் கொடுக்கப்பட்டது.
அதேபோல் அதிமுகவிலும் இபிஎஸ் தரப்பிலும் ஓபிஎஸ் தரப்பிலும் நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலில் பழனிசாமி தரப்பினருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 40 பேர் அடங்கிய அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதேபோல் ஓபிஎஸ் தனது தரப்பு பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து இருந்தார்.
இருதரப்பும் தங்கள் தரப்பு பேச்சாளர்களின் பட்டியல் தந்த நிலையில் நட்சத்திர வேட்பாளர் பட்டியலில் பன்னீர்செல்வம் தரப்பினரின் பெயர் இல்லை. ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்றதால் பட்டியல் ஏற்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தேர்தலில் அதிமுக வெற்றி பெற இரட்டை இலைக்கு பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.