வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக திமுக கூட்டணி இணைவதற்கு வாய்ப்புள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுகவின் தேர்தல் அறிக்கை ‘நேற்றோடு நான் சொன்ன வார்த்தை அது காற்றோடு போயாச்சு’. கிட்டத்தட்ட 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றுமே நிறைவேற்றவில்லை. இந்த அதிருப்தி மக்கள் மத்தியில் இருக்கும் பொழுது முதல்வர் கனவுலகத்தில் இருக்கிறார்.
தேர்தல் வாக்குறுதிகளாக முக்கியமாக அரசு வேலைவாய்ப்பை வருடந்தோறும் 1 லட்சம் பேருக்கு உருவாக்கித் தருவோம் எனச் சொன்னார்கள். அரசு தேர்வாணையத்தின் மூலம் மொத்தமாக 1500 பேருக்கான அழைப்புதான் கொடுத்தார்கள்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் மொத்தம் 3.45 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளோம். திமுகவும் பாஜகவும் கூட்டணி வைப்பார்கள் என சி.வி.சண்முகம் கூறியதற்கு மறுப்பு தெரிவித்து பாஜகவின் நாராயணன் திருப்பதி அறிக்கை கொடுத்துள்ளதாகச் சொல்லுகிறார்கள். திமுக சந்தர்ப்பவாத கட்சி. தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைக் கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைக்கத் துடியாய் துடிக்கும் கட்சி திமுக. அதைத்தான் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை எங்களுக்கு யாரையும் வெளியேற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்கள் தலைமையை ஏற்று வரும் கட்சிகளுக்கு எங்களின் உடன்பாடு உண்டு” எனக் கூறினார்.