அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, புதிய தமிழகம் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேமுதிகவையும் கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சியில் அதிமுக ஈடுபட்டள்ளது.
முதலில் இரண்டு இலக்கத்தில் தொகுதிகளை கேட்ட தேமுதிக படிப்படியாக குறைத்து, தற்போது பாமகவுக்கு குறையாமல் தங்களுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதிமுகவோ, நான்கு தொகுதிகளை கொடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாராளுமன்றத் தேர்தலில் தாங்கள் கேட்ட தொகுதி எண்ணிக்கையை குறைத்தால், இடைத்தேர்தலில் போட்டியிட தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக கூறியதால் அதிமுகவுடனான கூட்டணி உடன்பாடு ஏற்பட காலதாமதம் ஆகிறது.
திமுக கூட்டணி இறுதி வடிவம் பெறாததால் தேமுதிகவை தங்கள் கூட்டணியில் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் அதிமுக மூத்த நிர்வாகிகள். மேலும், இடைத்தேர்தலில் தனித்து நிற்க வேண்டும் என்ற முடிவில் பின்வாங்கக் கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளனர். அதேநேரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு போக திமுக அளவுக்கு நாமும் போட்டியிட வேண்டும் என அதிமுக மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் நாளை (செவ்வாய்க்கிழமை) தேமுதிக அலுவலகத்தில் அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் என்றும், இதில் மாநில, மாவட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. திடீரென அவசர ஆலோசனைக் கூட்ட அறிவிப்பு வந்துள்ளதால் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று அக்கட்சியினரிடையே விவாதங்கள் எழுந்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கூட்டணியில் தேமுதிக இடம்பெற வேண்டும் என்று அதிமுகவுக்கு பாஜக கடும் அழுத்தம் கொடுத்து வருகிறது. மேலும் தேமுதிக நல்ல முடிவை எடுக்கும் என்று தமிழிசை மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்து வருகின்றனர்.
தேமுதிகவை கூட்டணியில் இடம்பெற வலியுறுத்தும் பாஜகவிடம், கூட்டணி நலன் கருதி ஒரு தொகுதியை விட்டுக்கொடுக்குமாறு பாமகவிடம் பேசுமாறு நழுவிக்கொண்டதாம் அதிமுக தரப்பு.