
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சியில் உள்ள சிபிஎம் கட்சியின் வேட்பாளரான சச்சிதானந்தத்தை ஆதரித்து ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன் தலைமை தாங்கினார். ஊராட்சிமன்ற தலைவர் உலகநாதன் வரவேற்றார். ஒன்றியபெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், மாவட்டகவுன்சிலர் பத்மாவதி ராஜகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிள்ளையார் நத்தத்திற்கு வாக்குகள் சேகரிக்க வந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கும், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கும் கிராம மக்கள்பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்

அதன்பின்னர் வாக்காள மக்கள் மத்தியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, கிராமங்களில் வறுமையை ஒழித்தது நூறு நாள்வேலை திட்டம் தான். நூறுநாள் வேலை திட்டம் மூலம் வறுமையை மட்டுமின்றி வேலையில்லா திண்டாட்டமும் ஒழிந்தது. மத்தியில் ஆளும் பாஜக அரசு மீண்டும் வந்தால் நூறுநாள் வேலை திட்டத்தை முற்றிலும் ஒழித்துவிடும். அதன் பின்னர் எங்கு பார்த்தாலும் பசியும் பட்டினியும்தான் இருக்கும். இந்த நிலைமை வராமல் இருக்க வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சிபிஎம் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களித்து அவரை அமோக வெற்றியை பெறச் செய்ய வேண்டும்.
கடந்த வருடம் நான் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த போது ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த 110பேருக்கு ஒரு பைசா செலவில்லாமல் கூட்டுறவுத்துறையில் ரேசன்கடை பணியாளர்களாக பணியமர்த்தினேன். இதுபோல ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் அனைவருக்கும் கல்விக்கட்டணம் வழங்கியதோடு தேர்வு கட்டணமும் வழங்கியதால் ஆத்தூர் தொகுதியில் உள்ள கிராமப்புற ஏழைகளின் சிரமங்கள் குறைந்தது. தேர்தலுக்கு பிறகு நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பயனாளிகள் அனைவருக்கும் ரூ.400 ஊதியமாக கிடைக்க வழி செய்யப்படும் என்று கூறினார்.

அதனை தொடர்ந்து செட்டியாபட்டி, காந்திகிராமம் ஊராட்சிக்கு சென்று தேர்தல் பிரச்சாரம் செய்த பின்பு தொப்பம்பட்டி ஊராட்சிக்கு வந்த போது தொப்பம்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் காலனி மற்றும் அருந்ததியர் காலனியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் ஆரத்தி எடுத்து அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களையும் வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்களையும் வரவேற்றனர். அவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “இங்குள்ள மக்கள் தங்களுக்கு வீடு வசதி வேண்டுமேன கோரிக்கை விடுத்துள்ளனர். நான் ஒன்றை மட்டும் அவர்களுக்கு சொல்கிறேன். தேர்தல் முடிந்தபின்பு முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தாள் அன்று தொடங்கப்பட உள்ள கலைஞரின் கணவு இல்ல திட்ட மூலம் அவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.35ஆயிரம் கோடியை நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். வருடத்திற்கு ஒருலட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.
கடந்த10 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியின் போது திண்டுக்கல் மாவட்டம் 100 நாள் வேலை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருது வாங்கியது. தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு நூறு நாள் திட்டத்தை முடக்கும் வண்ணம் 1 லட்சம் கோடிநிதி வழங்குவதற்கு பதிலாக 60 ஆயிரம் கோடியை மட்டும் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் நூறுநாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு கூலியாக வழங்கியுள்ளது. பாக்கியுள்ள 40 ஆயிரம் கோடியை வழங்கினால்தான் நூறு நாள் வேலை திட்டபயனாளிகளுக்கு முழுமையான கூலி வழங்க முடியும். இதை மத்தியில் ஆளும் பாஜகஅரசு வழங்க மறுப்பதோடு நூறுநாள் வேலை திட்டத்தையும் முடக்க நினைக்கிறது. உங்களுக்கு நூறு நாள் வேலை திட்டம் முழுமையாக கிடைக்க வேண்டுமென்றால் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களித்தால் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். நூறு நாள் வேலை திட்டமும் தொடர்ந்து கிடைக்கும்” என்றார்.

பஞ்சம்பட்டி பாஸ்கா மைதானம் முன்பு பிரச்சாரம் செய்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அப்பகுதியில் உள்ள டீ கடைக்கு வேட்பாளருடன் சென்று டீ குடித்ததோடு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.