கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இருப்பினும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,98,706- லிருந்து 2,07,615 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,598- லிருந்து 5,815 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,00,303 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதித்த 1,01,497 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு பின் பிரதமர் மோடிக்கு ஆதரவாக 65 சதவீதம் மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக சி-வோட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் முதல்வர்களின் செயல்பாடுகளைப் பொருத்தவரை, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சிறப்பாகச் செயல்படுவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவருக்கு 82.96 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தப் பட்டியலில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அதேபோல, மக்களின் அதிருப்தியை பெற்ற முதல்வர்களின் பட்டியலில் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தமிழக முதல்வர் பழனிசாமி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த சர்வே முடிவால் அதிமுகவினர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே போல் தமிழகத்தில் 32.15% பேர் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.