தமிழகம் முழுவதும் ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.. உஷார்.. உஷார்.. உஷார்" என போஸ்டர்களால் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது அதிமுக மற்றும் தினகரன் கட்சியில் நடக்கும் உட்கட்சி விவகாரம் இரண்டு கட்சிக்கும் தலைவலியை ஏற்படுத்திருக்கிறது. அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் எனும் இரட்டை தலைமையால் கோஷ்டி பூசல் அதிமாகியுள்ளது. இந்த கோஷ்டி பூசலால் அதிமுக பலவீனமாக தற்போது இருக்கிறது. இதை வலுப்படுத்த கட்சிக்குள் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை முட்டுக்கட்டை போட்டு ஓபிஎஸ் தரப்பும், எடப்பாடி தரப்பும் தடுத்து விடுவதால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறி வருகிறது.
இந்த நிலையில் அமமுகவில் இருந்து தங்க தமிழ்செல்வன் இன்று திமுகவில் இணைந்தார். தங்க தமிழ்ச்செல்வன் முதலில் அதிமுகவில் இணைவதாக இருந்தது. இதற்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டை போட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவர் திமுகவில் இணைந்தது அதிமுக நிர்வாகிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த நிலையில் சில பரபரப்பு போஸ்டர்கள் தமிழகம் முழுவதும் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. அதில், "உஷார்.. உஷார்.. உஷார்.. ஊரு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்... அஇஅதிமுக எஃகு கோட்டை.. இதுவே புரட்சி தலைவர், புரட்சி தலைவி, ஒன்றரை கோடி தொண்டர்கள் மற்றும் பொது வாக்காளர்களின் கட்டளை... கழகத்தின் இரு கண்கள் "காலத்தை வென்ற ஈபிஎஸ்", "காவியத்தலைவர் ஓபிஎஸ்" என்று அச்சிடப்பட்டுள்ளது.
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று திமுகவை மறைமுகமாக சொல்வது இந்த போஸ்டர் மூலம் தெரிந்தாலும், இபிஎஸ், ஓபிஎஸ் ஒன்றாக சேர்ந்து கட்சியை நடத்த வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பம் என்று கூறுகின்றனர். இவர்களின் உட்கட்சி பூசலால் கட்சி தொய்வு அடைந்து வருகிறது என்று அதிமுக தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர்.