Published on 03/07/2019 | Edited on 03/07/2019
மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிக்கிப்பட்ட நிலையில், திமுக சார்பில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதுகுறித்த அறிவிப்பை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தின்படி ஒரு இடம் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அதிமுக சார்பில் யாருக்கு கொடுக்கப்படும் என்று பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமாகவிற்கு ஒரு இடம் கொடுக்கப்படும் என்று நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே கூறியுள்ளதால் அவர்களுக்கு ஒரு சீட் உறுதியானது.

மற்ற இரு இடங்களுக்கு அதிமுகவில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் முன்னாள் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் விஸ்வாநதன் ஆகிய இருவரும், அ.தி.மு.க., ராஜ்யசபா வேட்பாளர்களாக அறிவிக்கப்படும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இவர்கள் இருவரின் பேர் ராஜ்யசபா சீட் போட்டியில் இருப்பதற்கான காரணம் பற்றி விசாரித்த போது, அதிமுகவில் இன்னும் ஓபிஎஸ், எடப்பாடி தரப்புக்கு இடையே கோஷ்டி பூசல் இருக்கிறது. அதனால் ஓபிஎஸ் ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதன் அல்லது கே.பி.முனுசாமிக்கும், எடப்பாடி ஆதரவாளரான தம்பிதுரைக்கும் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.