தமிழகம் உட்பட 17 மாநிலத்தில் உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 6 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஏப். 2 ஆம் தேதி உடன் முடிவடைகிறது. திமுக மற்றும் அதிமுகவில் தலா 3 ராஜ்யசபா சீட்டுகளுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை மூன்று ராஜ்யசபா சீட்டுகளையும் கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்காமல் அதிமுகவினரே எடுத்து கொள்ளலாம் என்று கட்சி சீனியர்கள் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் ஏப்ரலில் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க. சார்பாக மூன்று பேரைத் தேர்ந்தெடுக்க ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த 3 சீட்டுகளுக்கு தம்பிதுரை, கே.பி.முனுசாமி, அரவிந்த் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், மாஜி எம்.பி.சவுந்திரராஜன், எக்ஸ் எம்.எல்.ஏ. சிவபதி உள்பட 12 பேர் போட்டியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்களோடு, அரசின் டெல்லி பிரதிநிதியாக இருக்கும் தளவாய் சுந்தரமும் ராஜ்யசபா சீட் வேண்டும் என்று கேட்பதாக சொல்லப்படுகிறது. பிரதிநிதித்துவம் இல்லாத நாடார், முத்தரையர், மற்றும் முஸ்லீம் சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அதிமுக வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.