அதிமுக பொதுக்குழு கடந்த 11ம் தேதி சென்னை அருகே உள்ள வானகரத்தில் நடந்தது. அதேசமயம், இந்தப் பொதுக்குழு கூட்டம் செல்லாது என ஓ.பி.எஸ். தேர்தல் ஆணையத்திற்கு மனு கொடுத்துள்ளார். ஆனால், கடந்த 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருபுறம் அதிமுகவில் எடப்பாடி அணி, ஓ.பி.எஸ் அணி என அரசியல் நடந்துகொண்டிருக்க, நேற்று முன்தினம் அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்த பொன்னையன், கன்னியாகுமரியைச் சேர்ந்த நாஞ்சில் கோலப்பன் எனும் அதிமுக நிர்வாகியுடன் செல்போனில் பேசிய ஆடியோ வெளியாகி அதிமுக எடப்பாடி அணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க. கட்சியின் பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
அ.தி.மு.க.வின் தலைமை நிலையச் செயலாளராக எஸ்.பி.வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர்களாக பெஞ்சமின், ராஜன் செல்லப்பா, ந.பாலகங்கா, செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ப.தனபால், ஓ.எஸ்.மணியன், காமராஜ், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி வகித்துவந்த அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் பதவி தற்போது எஸ்.பி.வேலுமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்த பொன்னையன் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.