Published on 07/08/2019 | Edited on 07/08/2019
நடந்து முடிந்த நாடளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தேனி தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. இதே போல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சியும் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. இதனால் தினகரன் கட்சியில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி திமுக மற்றும் அதிமுக கட்சியில் இணைந்து வந்தனர். குறிப்பாக தினகரனின் நம்பிக்கையாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா மற்றும் சில முக்கிய நிர்வாகிகள் அமமுகவில் இருந்து வெளியேறினர். இது தினகரன் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் மாற்று கட்சியை சேர்ந்த குறிப்பாக அதிமுக மற்றும் பாமக கட்சியை சேர்ந்தவர்கள் தினகரன் கட்சியில் இணைந்தனர்.
தற்போது அதிமுக கட்சியில் அமைச்சர்களுக்கும், அமைச்சரை சார்ந்தவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருவதால் மீதமுள்ள நிர்வாகிகள் கட்சி தலைமை மீது மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் வருகிற உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கட்சி மாறும் எண்ணத்தில் மாவட்ட நிர்வாகிகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் சொல்கின்றனர். இன்னும் சில பேர் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் என்ற நிலைப்பாடு அதிமுகவில் உச்சகட்ட உட்கட்சி பூசல் இருப்பதால் தேர்தல் நேரத்தில் சீட் யாருக்கு கொடுப்பார்கள் என்று குழப்பத்தில் உள்ளனர். இதனால் அடுத்த தேர்தலுக்குள் கட்சி மாறும் மன நிலையில் மாவட்ட நிர்வாகிகள் வந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.