தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க.-வின் கும்பகோணம் தி.மு.க ஒன்றியச் செயலாளர் அசோக்குமாரின் மனைவி காயத்திரி அசோக்குமார். இவர் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தின் பெருந்தலைவராக தேர்வாகிய பிறகு இரண்டாவது கூட்டத்தை ஒன்றிய கூட்ட அரங்கில் நடத்தினார். ஒன்றிய ஆணையர் பூங்குழலி உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர், கூட்டத்திற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். ஆனால் சொந்தக் கட்சியான தி.மு.க.-வைச் சேர்ந்த கும்பகோணத்தின் மற்றொரு ஒன்றியச் செயலாளரும், ஒன்றிய துணை சேர்மனுமாகிய கணேசனும், அவரது ஆதரவு கவுன்சிலர்கள் 6 பேரும் புறக்கணித்து விட்டனர்.
கூட்டத்தில் சுமார் 100 பங்கங்களில் எழுதப்பட்ட 118 தீர்மானங்கள் வாசிக்கப் பட்டன. இதில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக கிருமிநாசினி உள்ளிட்ட பொருள்களை 90 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டதாக வாசிக்கப்பட்டது. அப்போதே அ.தி.மு.க.-வைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலரான சசிகலா 90 லட்சத்திற்கு கிருமிநாசினி வாங்குனீங்களா என முறைகேடு குற்றச்சாட்டை எழுப்ப, இரு கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம், ஊழல் விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. கவுன்சிலர் சசிகலாவின் மாமனாரும், கும்பகோணம் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளருமான அறிவழகன் புகார் அளித்துள்ளார். இதனைச் சாதகமாக்கிக் கொண்ட அ.ம.மு.க.-வில் உள்ள சிலர், அ.தி.மு.க.-வுக்கு ஆதரவு தெரிவிப்பது போல போஸ்டர் அடித்து நகர் முழுவதும் ஒட்டி பரபரப்பாகினர். தி.மு.க. தரப்போ அ.தி.மு.க. அரசு வாங்கிய கிருமிநாசினிகளின் விலைப்பட்டியலையும் தி.மு.க. நிர்வாகத்தில் ஆணையர் வாங்கிய கிருமிநாசினிகளின் விலைப் பட்டியலையும் போஸ்டர் அடித்து ஒட்டி பதிலடி கொடுத்திருப்பது பரபரத்துக்கிடக்கிறது.
அ.தி.மு.க. கவுன்சிலர் சசிகலா பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகையில், "அதிக ஊராட்சிகளைக் கொண்ட திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் கூட ஒரு லட்சத்து 60,000 ரூபாய்க்குதான் கிருமிநாசினி வாங்கியிருக்காங்க. இங்கு மட்டும் ரூ.90 லட்சத்துக்கு வாங்கியிருப்பதாகக் கணக்கு காட்டுகின்றனர். இதில் 65 லட்சம் ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது. 118 தீர்மானங்களில் 11 தீர்மானங்களில், ஒவ்வொரு தீர்மானத்திலும் ஒவ்வொரு மாதிரியான விலையைக் குறிப்பிட்டிருக்கின்றனர். கும்பகோணத்தில் உள்ள ருமாங்கோ என்கிற கம்பெனியில் குளோரின் பவுடர் வாங்கியதாகச் சொல்கிறார் அப்படி ஒரு கம்பெனி இந்த மாவட்டத்திலேயே இல்லை'' என்கிறார்.
ஊழல் குறித்து ஒன்றியக்குழு தலைவர் காயத்திரி அசோக்குமாரிடம் விளக்கம் கேட்டோம், "ஒன்றரை மாதங்களுக்கு உண்டான கிருமி நாசினிகள் இருப்பு இருக்கவேண்டும் எனத் தபால் மூலம் ஆட்சியர் உத்தரவு போட்டார். அரசு விதிப்படி, தரமானதைக் குறைவான விலையில் வாங்க உத்தரவிட்டேன். அதை எந்தக் கம்பனியில் வாங்க வேண்டும் என்பதெல்லாம் ஆணையரின் வேலை. இதற்காக மூன்று பேரிடம் கொட்டேஷன் வாங்கி குறைந்த விலையில் கொடுத்த கம்பனியில் வாங்கி அனைத்து ஊராட்சிக்கும் பிரித்துக் கொடுத்தோம், இதில் ஜி.எஸ்.டி. 18 சதவிகிதம், வருமானவரி 2 சதவிகிதமே 20 லட்சம் வந்து விட்டது. இதுல எப்படி ஊழல் நடக்கும். வேண்டுமென்றே குற்றம் கூறுகிறார்கள்'' என்கிறார்.
ஒன்றியக் குழு கூட்டத்திற்கு ஆதரவு கவுன்சிலர்களோடு வராமல் இருந்த ஒ.செ.வும், வைஸ்சேர்மனுமான கணேசனிடம் கேட்டோம், "எனக்கு கால் முடியல, அதனால போகல, மற்றபடி எதுவும் தெரியாது, மற்றபடி ஏதேதோ குற்றம் சொல்லுவது அனைத்துமே பொய்யானது'' என்கிறார்.
உள் அரசியல் அறிந்தவர்களோ, "சேர்மன் பதவியைக் குறிவைத்து அ.தி.மு.க. ஒ.செ. அறிவழகன் தனது மருமகள் மூலம் ஆரம்பத்தில் இருந்தே காய்நகர்த்தி வருகிறார். அதேபோல் துணை சேர்மனாக இருக்கும் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் கணேசன் கும்பகோணம் எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகனின் தீவிர ஆதரவாளராக இருக்கிறார். இவர் சேர்மன் தன் கட்டுபாட்டில்தான் இருக்க வேண்டும், தனக்கும் தனிசேர் ரூம் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அதைச் சேர்மன் தரப்பு மறுத்துவிட்டது, அதனால் சேர்மன் காயத்திரிக்கு எதிராகச் செயல்பட்டுவரும் அ.தி.மு.க. ஒ.செ. அறிவழகனுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறார். அவரது ஆதரவு கவுன்சிலர்களும் கூட்டத்தில் ஆப்சென்ட்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் தி.மு.க. சேர்மன் காயத்ரியை நீக்கிவிட்டு, தனது மருமகளைச் சேர்மன் பதவியில் உட்காரவைத்து, சேர்மனுக்கு இணையான அந்தஸ்தை கணேசனுக்கு தருவதுதான் அ.தி.மு.க. ஒ.செ. அறிவழகனுக்கும் தி.மு.க ஒ.செ. கணேசனுக்குமான டீலிங்’’ என்கிறார்கள் விவரமாக. அதுபோலவே அ.தி.மு.கவிலும், அறிவழகனின் தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையிலான அரசியல் காய் நகர்த்தல்களுக்கு எதிராக ஆளுங்கட்சி நிர்வாகிகள் கொந்தளிப்பில் உள்ளனர்.
கும்பகோணத்தில் அ.ம.மு.க.-வும் அ.தி.மு.க.-வும் ஒன்றுதான். உடையாளூர் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் அ.தி.மு.க.-வும், அ.ம.மு.க.-வும் கூட்டணி போட்டாங்க, அதேபோல மருதாநல்லூர் சொசைட்டியிலும் தி.மு.க.-வோடு கூட்டணிப் பதவியில் இருக்காங்க, கிருமிநாசினி விவகாரத்தில் கூட எதிர்பார்த்த கமிஷன் வராததால்தான் அ.தி.மு.க. தரப்பு பிரச்சினையைக் கிளப்பியது என்கிறார்கள்.