ஜெயலலிதாவின் மறைவையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வந்த நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து,அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் பிரிந்தனர். அதன் பிறகு பொதுக்குழு கூட்டப்பட்டு அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் நீக்கப்பட்டனர். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை செல்லவே, சமீபத்தில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில் சிவகங்கையில் நடைபெறும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கூட்டம், மற்றும் கட்சியின் பொதுக்குழு கூட்டமும் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பன்னீர்செல்வம் தரப்பினர் காலை கண்டன ஆர்ப்பட்டம் நடத்தினர். இதனிடையே பழனிசாமி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விமானத்தின் மூலம் மதுரை வந்த அவரை விமான நிலைய பேருந்தில் இருந்த பயணி ஒருவர் திடீரென ஃபேஸ்புக்கில் லைவ் போட்டு, எல்லாரும் பார்த்துக்கொள்ளுங்கள், நான் துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். பின்பு அவரையே கூப்பிட்டு, அண்ணன் எடப்பாடியார் துரோகத்தின் அடையாளம். சின்ன அம்மாவிற்கு துரோகம் செய்தவர். 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர்” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் சிவகங்கையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மருது அழகுராஜ், “காசே கொடுக்காமல் 12 மணி நேரத்தில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏராளமானோர் வந்திருக்கின்றனர். ஆனால் மாலை நடக்கவிருக்கும் எடப்பாடி கூட்டத்திற்கு யாரும் வரமாட்டார்கள் என்று பக்கத்து மாவட்டத்தில் இருந்து ஆட்களை அழைத்து வரவுள்ளனர். அதற்காக ஆண் என்றால் ரூ.500, பெண் என்றால் ரூ.300, ஆண்களுக்கு சிறப்பு பரிசாக ஒரு குவாட்டரும் அளிக்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் கூட்டத்தை கூட்டக்கூடிய சக்தி ஓ.பி.எஸ்ஸுக்கு மட்டுமே உள்ளது. அதேபோன்று ஒரே கூட்டத்தை வைத்து தமிழகம் முழுவதும் சுத்தக்கூடிய சக்தி எடப்பாடிக்கு மட்டுமே உள்ளது.
இன்றைக்கு எங்கள் மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மலேசியாவில் இருந்து ஊருக்கு வந்துகொண்டிருந்த போது மதுரை விமான நிலைய பேருந்தில் எடப்பாடியை கண்டதும் துரோகத்தின் அடையாளம் எடப்பாடி என்று முழக்கம் எழுப்பியுள்ளார். ஆனால் அவர் எங்கள் கழகத்தைச் சார்ந்தவர் அல்ல. அவரை மதுரை விமான நிலையத்தில் போலீசை வைத்து அடித்து கைது செய்திருக்கிறார்கள். நாங்கள் சொன்ன மாதிரி துரோகம் செய்த எடப்பாடிக்கு எதிராக மக்கள் வெகுண்டு எழுந்து புரட்சி செய்வார்கள். அதேதான் அந்த பையனும் செய்திருக்கிறான். அவன் எங்கள் அணியும் அல்ல. ஆனால் எடப்பாடியின் முகத்தைப் பார்த்ததும் துரோகத்தின் அடையாளம் என்று தோன்றியிருக்கிறது. எடப்பாடி போகும் இடமெல்லாம் இங்கு நடக்கும் ஆர்ப்பாட்டம் போல நடக்கும். அதனால் எடப்பாடி தான் அபகரித்தது தவறு என்று கூறிவிட்டு கட்சியை தாமாக முன்வந்து கொடுத்துவிட்டு போகும் நிலை வரும். நாங்கள் வயிர் எரிந்து சொல்கிறோம் இது நடக்கும். ஆர்பாட்டத்திற்கு வந்த அனைவரும் போகும்போது கொல்லங்குடி காளியம்மன் கோவிலில் காசு வெட்டிபோட்டுவிட்டுத்தான் செல்வோம்” என்று காட்டமா பேசியுள்ளார்.