தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுமென இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் வேகமெடுத்து வருகின்றன. கூட்டணி, தொகுதி உடன்பாடு, வேட்பாளர் அறிவிப்பு, வேட்பு மனுத் தாக்கல் ஆகியவற்றை முடித்துவிட்டு தற்போது கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் வாக்குச் சேகரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
நாகை சட்டமன்றத் தொகுதியில், அதிமுக சார்பில், தங்க கதிரவன் போட்டியிடுகிறார். இவர் நாகூர் கடைவீதியில் இன்று வாக்கு சேகரித்துவந்தார். அப்போது, கடைவீதியில் இருந்த கடை ஒன்றில், வாக்கு சேகரிக்கச் சென்றார். அப்போது அந்தக் கடையில் இருந்தவர், ‘இங்குவந்து வாக்கு கேட்காதீர்; பாஜக கூட்டணியில் இருக்கும் உங்களுக்கு சிறுபான்மை இனத்தவர்கள் வாக்களிப்பதில்லை என முடிவெடுத்துள்ளோம். நீங்க அதிமுக வேட்பாளரா இல்லாம இருந்தா உங்களுக்கு வாக்களிப்போம். ஆனால், இப்போது முடியாது. அதனால், கடையிலிருந்து வெளியேறுங்கள்’ என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட அதிமுக வேட்பாளர் தங்க கதிரவன் அதிர்ச்சி அடைந்தார். நாகை தொகுதியில் பெரும்பாலான இடங்களில் இதுவே நிலைமை என்கின்றனர் நாகூர் கடைவீதி மக்கள். நாகை சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 48 ஆயிரத்திற்கும் அதிகமான சிறுபான்மையினர் வாக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.