நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படு தோல்வியை அடைந்ததது மட்டுமின்றி தனது வாக்குவங்கியையும் இழந்தது.இதனால் அதிமுக கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.இந்த நிலையில் ராஜன் செல்லப்பா பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது: அம்மாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர் தலைமை பொறுப்பை ஏற்று நடத்த வேண்டும். அ.தி.மு.கவுக்கு ஒருவரே தலைமை வகிக்க வேண்டும். ஆளுமை திறனுடைய தலைவர் அதிமுகவில் தற்போது இல்லை. அதிமுக கட்சியில் அனைவருக்கும் நெருடல் இருக்கிறது. அந்த நெருடலை போக்க எல்லோரும் கருத்து தெரிவித்து உள்ளனர். ஒற்றை தலைமையில் கட்சியை கட்டுப்பாட்டுடன் கொண்டு செல்ல வேண்டும்.
இரண்டு தலைமை இருப்பதால் முடிவு எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகி வருகிறது. சுயநலமற்ற ஒருவரை தலைமைக்கு தேர்ந்து எடுக்க வேண்டும். முடிவெடுக்கும் நிலையில் கட்சி தலைமை இருக்க வேண்டும். ஒரே தலைமையை உருவாக்குவது குறித்து அதிமுக பொதுக்குழுவில் அனைத்து நிர்வாகிகளும் வலியுறுத்துவோம்.அதிமுகவில் யாரிடம் அதிகாரம் இருக்கிறது என தெரியவில்லை. நான் சொல்லும் கருத்துக்கள் கட்சியின் உட்பிரச்சினையல்ல. தினகரன் என்ற மாயை இப்போது இல்லை என தெரிந்து விட்டது. தேர்தலில் முக்கிய தொகுதிகளை அதிமுக இழந்துவிட்டது. தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க இன்னும் பொதுக்குழு கூட்டாதது ஏமாற்றம் அளிக்கிறது .
ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் பத்து முறை அமைச்சரவை மாறியிருக்கும். புகாருக்கு உள்ளான அமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள். வெற்றி பெற்ற 9 எம்.எல் ஏக்கள் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தவில்லை. தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமாருடன் 9 எம்எல்ஏக்கள் ஜெயலலிதா சமாதிக்கு செல்லாதது ஏன்? அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒரு போதும் விலக மாட்டார்கள் என கூறினார். இவர் அளித்த பேட்டியால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி என்ன? யாரை பொது செயலாளர் ஆக்குவதற்கு இவர் பேட்டி கொடுத்தார் என்று அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.