கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அதிமுகவின் 53ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அதிமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.என். குமார் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் தோப்பு கே. சுந்தர் துவக்கி வைத்துப் பேசினார். சிறப்பு அழைப்பாளராக அதிமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. பாண்டியன் கலந்து கொண்டு பேசுகையில், “அதிமுக கடந்த 52 ஆண்டுகளாக பல்வேறு வேதனைகளையும் சாதனைகளையும் புரிந்து வளர்ந்து 53ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதற்குக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கொடுத்த ஆதரவு முக்கியமானது.
தற்போது திமுக அரசு மதுவை ஒழிப்போம் என்கிறது. ஆனால் திமுகவில் உள்ள முக்கிய அமைச்சர்கள் நிர்வாகிகள் கையில் தான் மது ஆலைகள் உள்ளது. இதனை எப்படி ஒழிப்பார்கள்?. இது மக்களை ஏமாற்றும் வேலை. எனவே திமுக அரசால் மதுவை ஒழிக்க முடியாது. உளுந்தூர்பேட்டையில் இந்த தொகுதியின் எம்.பி. திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தினார். அந்த மாநாட்டில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள். வரும் தேர்தலில் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராவது உறுதி. இதனை மக்கள் தற்போது திமுக ஆட்சியின் அவலங்களைக் கண்டு தானாகவே பேசத் தொடங்கியுள்ளனர்” என்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைமை கழக பேச்சாளர் சுந்தர பாண்டியன், கழக செய்தி தொடர்பாளர் காசிநாதபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அதிமுக கடந்த 52 ஆண்டுகளாகக் கடந்து வந்த பாதைகள் குறித்து பேசினார்கள். இதில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் பாலமுருகன், மாவட்ட ஊராட்சி தலைவர் திருமாறன், முன்னாள் மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட நிர்வாகிகள் ரங்கம்மாள், செல்வம், தேன்மொழி, சுந்தரமூர்த்தி, அசோகன், மாரிமுத்து உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் டேங்க் சண்முகம் நன்றி கூறினார்.