கரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை தினந்தோறும் 4 மணிக்குச் செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறது. ரேபிட் டெஸ்ட் கிட்களை அனைத்து மாநிலங்களுக்கும் போதுமானதாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று செய்தியாளர்கள் மத்தியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்தது. அப்போது ரேபிட் டெஸ்ட் கிட்கள் மாறுபட்ட முடிவுகள் காட்டுவதாக வெளியான தகவல் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டபோது. ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலங்களில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கரோனா பரிசோதனைச் செய்தபோது ஒரு முறை வேறு முடிவும், அடுத்தமுறை வேறுவிதமான முடிவு வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மாறுபட்ட முடிவுகள் வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு கரோனாவை கண்டறிய ரேபிட் டெஸ்ட் கிட்களைப் பயன்படுத்த வேண்டாமென இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதனால் கரோனா பரிசோதனைக்கான ரேபிட் கிட் கொள்முதல் விவகாரத்திலேயே ஏகப்பட்ட சர்ச்சை கிளம்பியிருக்கிறது என்கின்றனர். இந்த நிலையில், இந்த கிட் மூலம் பரிசோதிக்கும் நிகழ்ச்சியை, ஊரடங்கு நேரத்திலேயே கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரிப்பன் வெட்டி கோலாகலமாத் தொடங்கி வைத்துள்ளார் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி. இதில் கொடுமை என்னவென்றால், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டாக்டர்கள் உள்ளிட்ட பலரும் சமூக ஒழுங்கைக் கொஞ்சம் கூடக் கடைப்பிடிக்காமல், அமைச்சருக்கு அருகே நெருக்கியடித்து நின்று, போட்டோவுக்கு போஸ் கொடுத்ததுதான் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர்.