Published on 12/07/2019 | Edited on 12/07/2019
சட்டமன்ற கூட்ட தொடரில் துறை ரீதியான கோரிக்கைகள் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு துறையில் உள்ள கோரிக்கைகள், பிரச்சனைகள் பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலும், விளக்கமும் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சட்டமன்றத்தில் சிறு மற்றும் குறு தொழில்துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பட்டாசு தொழிலாளர்களைக் காப்பாற்ற தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 'பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை வைத்து வாதாட ஏற்பாடு செய்துள்ளார் முதல்வர் என்று கூறினார். மேலும் இதுபற்றி விவாதிக்க 10 அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பி வைத்தார். தொழிலாளர்களுக்கு சாதகமான தீர்ப்புகளையும் வரவைத்தார்' எனக் கூறினார். 'ஆகையால் நம்மை விட முதல்வருக்கு பட்டாசு தொழிலாளர்களைப் பற்றி நன்றாகத் தெரியும். அதனால் பட்டாசு காவலன் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை அதுபற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்' எனக் கூறினார்.