அமைச்சர் ஒருவருக்கும் எம்.எல்.ஏ. ஒருவருக்கும் ‘அதுவாமே?’ என்று விருதுநகர் அரசியல் வட்டாரத்தில் பேச்சு கிளம்பியிருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஒருவர் மட்டும்தானே அமைச்சர்? அவருக்கு என்னவாம்? நிவாரண உதவி வழங்குவதற்காக மக்களைச் சந்தித்தபடியே பிசியாக இருக்கிறார் அல்லவா? உடல் அசதியோடு காய்ச்சலும் எட்டிப் பார்த்திருக்கிறது. அவரது விசுவாசிகள் பதற்றம் அடைந்து ‘கரோனாவாக இருக்குமோ?’ என்று கேள்வி எழுப்ப, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ‘நெகடிவ்’ ரிசல்ட் வந்தபிறகே, "அப்பாடா' என்று பெருமூச்சு விட்டதோடு, "தர்மம் தலைகாக்கும்...'’ என்று பாடவும் செய்துள்ளனர்.
அப்படியென்றால் எம்.எல்.ஏ.? ஆம். விருதுநகர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசனை, கடந்த 10 நாட்களாக யாரும் பார்க்க முடியவில்லை. கலைஞர் பிறந்தநாள் விழா உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகளிலோ, கலந்துகொள்ள வேண்டிய திருமணங்களிலோ கூட, எம்.எல்.ஏ. தலைகாட்டவில்லை. அதனால், கரோனா என்றும் எம்.எல்.ஏ. தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார் என்றும் ஊரே கிசுகிசுக்க, அவரது உறவினர்களோ, "யூரினல் இன்ஃபெக்ஷன்.. ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார்... ஓய்வில் இருக்கிறார்'' என்கிறார்கள். கரோனாவை போலவே, அதுகுறித்த வதந்தியும் வேகமாகத் தான் பரவுகிறது.