அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி கூடவிருக்கிறது. அதன் காரணமாகப் பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்க கடந்த 14ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தின் போது, அதிமுக அலுவலகம் வெளியே அதிமுக தொண்டர்களில் ஒரு தரப்பினர் ஒற்றைத் தலைமை வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். மற்றொரு தரப்பினர் ஓ.பி.எஸ். தலைமையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
அதிமுக அலுவலகம் வெளியே மட்டும்தான் இப்படியான கோஷம் என்று நினைத்திருக்க ஆலோசனைக் கூட்டத்திலும் ஒற்றைத் தலைமை குறித்து பேசியதாக ஜெயக்குமார் வெளியே வந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இதன்பிறகு தொடர்ந்து நான்கு நாட்களும், ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகியோர் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதேசமயம், இருவருக்கு ஆதரவாகவும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இடையில், ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘ஒற்றைத் தலைமை தேவையற்றது. அது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம். தற்போது இருக்கும் இரட்டை தலைமையே தொடரலாம்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று மீண்டும் அதிமுக அலுவலகத்தில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்க அனைத்து முக்கிய நிர்வாகிகள் வந்தனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கூட்டத்திற்கு நிர்வாகிகள் வரும்போதே, அவரின் ஆதரவாளர்களும் அதிகளவில் அதிமுக அலுவலகத்தில் கூடினர். இதனால், காலை முதலே அதிமுக அலுவலகம் பரபரப்பானது. இன்றும் ஓ.பி.எஸ். அலுவலகத்திற்கு வந்தபோது திரண்டிருந்த தொண்டர்கள் ஒற்றைத் தலைமை குறித்து கோஷங்களை எழுப்பினர். அதேபோல், ஜெயக்குமார் உள்ளே நுழைந்தபோது அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர்.
அப்போது, அங்கு இருந்த ஒரு தரப்பினர் ஜெயக்குமார் ஆதரவாளரும், பெரம்பூர் பகுதிச் செயலாளருமான மாரிமுத்துவை தாக்கினர். இதில் அவருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. அதன்பின் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம், “எடப்பாடி ஆளா? என்று கேட்டுத் தாக்குதல் நடத்தினர்” எனக் குற்றம் சாட்டினார். இதேபோல், அலுவலகத்தின் வெளியே இருந்த ஜெயக்குமார் ஆதரவாளர்களுக்கும், ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதிமுகவின் பொதுக்குழு கூடக் கூடாது என ஏற்கனவே ஒருவர் சென்னையில் உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதேபோல், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கட்சியின் சட்டவிதிகளில் மாற்றம் செய்யக்கூடாது என மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக தரப்பில், வரும் 23ம் தேதி பொதுக்குழு நடத்தப்படுவது உறுதி எனச் சொல்லப்படுகிறது. 23ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் தான் இந்தப் பிரச்சனைகளுக்கான முடிவு தெரியவரும்.