Skip to main content

நான் காண்ட்ராக்ட் விஷயத்தில் தலையிடுவதில்லை... அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பூசல்... அதிருப்தியில் இபிஎஸ்!

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

"நாங்குநேரித் தொகுதியின் திட்டப்பணிகளுக்கான கமிசன் யாருக்கு?' என்பது குறித்து தொகுதியின் எம்.எல்.ஏ.வுக்கும், ஒ.செ.வுக்குமிடையே நடந்த முட்டல்கள் விவகாரம் பெரிதாகி, பஞ்சாயத்துக்காக கட்சித் தலைமை வரை போயிருக்கிறது.

 

admk



நாங்குநேரியின் எம்.எல்.ஏ.வாக கடந்த எட்டு வருடங்களாக இருந்தவர் காங்கிரசின் வசந்த குமார். ஆனால், தொகுதிக்குக் கொண்டு வரப்படும் எந்த ஒரு திட்டப் பணியிலும் அதற்குரிய காண்ட்ராக்ட்டின் பலாபலன்கள் ஆளும் தரப்பின் நாங்குநேரி அ.தி.மு.க. ஒ.செ.வும். எக்ஸ் எம்.எல்.ஏ.வுமான விஜயகுமார் மற்றும் அவர் தரப்பினரையுமே சென்றடைந்திருக்கின்றன. மேலும் எக்ஸ் எம்.பி.யும், அ.தி.மு.க.வின் மா.செ.வுமான பிரபாகரன், அத்துடன் கட்சியின் மேல் மட்டத் தலைவரும் ஓ.பி.எஸ்.சின் விசுவாசியும், நாங்குநேரி சட்டமன்றப் பொறுப்பாளருமான ஆர்.எஸ். முருகன் போன்றவர்களின் நட்பும் ஒ.செ.வுக்கு துணை நிற்க, ஒன்றியத்திற்கு இது சாத்தியமாகி இருக்கிறது.

 

admk



இதனால் தொகுதியின் பிற பகுதி நிர்வாகிகள், நாங்குநேரியின் ந.செ.பரமசிவம் உட்பட பலர் அதிருப்தியில் இருந்திருக்கிறார்கள். இது குறித்து ர.ர.க்களின் புகார்கள் கட்சித் தலைமைக்குப் பறந்தும், பலனற்றுப் போயிருக்கிறது.

வசந்தகுமார் எம்.பி.யாகி விட்டதால் அண்மையில் நடந்த நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் நாராயணன் எம்.எல்.ஏ.வானார். அதன் பின்பும் காண்ட்ராக்ட்களில் ஒ.செ. விஜயகுமார் தரப்புகளின் கரங்களே உயர்ந்திருக்கின்றன.

ஒப்பந்தப் பணிகளில் ஒ.செ.வின் ஆதிக்கம் தொடர்வதைச் சகிக்க மாட்டாத பிற பொறுப்பாளர்கள் இதனை எதிர்த்திருக்கிறார்கள். குறிப்பாக, தொகுதித் திட்டங்களையே குறியீடாகக் கொண்டிருந்த எம்.எல்.ஏ. நாராயணனையும் பொரும வைத்திருக்கிறது.


இந்தச் சூழலில் நாங்குநேரி ந.செ. பரமசிவம் மற்றும் ஒன்றியத்தின் எதிர்ப்பாளர்கள், எம்.எல்.ஏ. பக்கம் இணைய, அதனால் தெம்பான எம்.எல்.ஏ., ’இங்கே நான்தான் எம்.எல்.ஏ. தொகுதிப் பணிகள் ஒப்பந்தங்கள் கூட எனது பொறுப்பில்தான் செயல்படும். உங்களின் குறுக்கீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள்''’என்று ஒன்றியத்திடம் சொன்னதாகவும், இது குறித்து அவர்களுக்குள் வாக்குவாதம் கூட நடந்ததாக குறிப்பிடுகின்றனர் ஏரியாவின் ர.ர.க்கள். அதையடுத்தே, கட்சியின் நிகழ்ச்சிகளில், எம்.எல்.ஏ.வின் நிகழ்ச்சி என்றால் ஒன்றியம் புறக்கணிப்பதும், ஒன்றியத்தின் நிகழ்ச்சி ஏற்பாடு எனில் எம்.எல்.ஏ. புறக்கணிப்பதுமாக நடந்திருக்கிறது.


விவகாரம் முற்றிப்போன வேளையில்தான், ஒன்றியத்தை மாற்றவேண்டும் என்று தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் கட்சித் தலைமைக்குப் பிரஷர் கொடுத்திருக்கிறாராம் நாராயணன்.

இது குறித்து விஜயகுமாரிடம் நாம் பேசியபோது...

"நான் காண்ட்ராக்ட் விஷயங்களில் தலையிடுவதில்லை. என் மீதான தனிப்பட்ட காழ்ப் புணர்ச்சியில், ஒரு சிலரை வைத்துக் கொண்டு எனக்கு எதிரான வேலையைச் செய்கிறார். நடந்தவற்றைத் தலைமைக்கு நானும் தெரியப்படுத்தியிருக்கிறேன்''’என்கிறார் அழுத்தமான குரலில்.

 

 

சார்ந்த செய்திகள்