திருச்சி மலைக்கோட்டை பகுதி அதிமுக பொருளாளராக இருந்தவர் வணக்கம் சோமு. இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான இவர், மனைவியைப் பிரிந்து வாழ்கிறார். இந்த நிலையில் திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கல்லூரி உதவிப் பேராசிரியை ஒருவரை, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 தேதி நண்பர்களுடன் ஆம்புலன்ஸில் கடத்தியுள்ளார். கடத்தல் தகவலை அறிந்த போலீசார் அவர்களை விரட்டிச் சென்றனர். திருச்சி - திண்டுக்கல் சாலையில் மணப்பாறை அருகே அந்தப் பெண்ணை சாலையோரம் இறக்கி விட்டு கடத்தல் கும்பல் தப்பியது.
இந்த வழக்கில் வணக்கம் சோமுவின் கூட்டாளிகளான தஞ்சையைச் சேர்ந்த அலெக்ஸ், விக்னேஸ்வரன், ஞானபிரகாஷம், ஜெயபால், விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் வணக்கம் சோமு, தலைமறைவாகவே இருந்தார். ஒரு தலைக்காதலால் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த அவரை அதிமுக தலைமை, பகுதி பொருளாளர் பதவியில் இருந்து நீக்கியது, மேலும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் இருந்தும் நீக்கியது.
ஜாமீனுக்காக நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக மனுத்தாக்கல் செய்தும் அவை தள்ளுபடி ஆகிக்கொண்டே இருந்தன. இந்த நிலையில், 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் இன்று காலை சரணடைந்தார்.
இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, கடந்த 6 மாதங்களாக கேரளா, பெங்களுர் உள்ளிட்ட இடங்களில் பதுங்கி இருந்த சோமுவை பிடிக்க பல்வேறு முயற்சி செய்தும் அதிலிருந்து தப்பியோடினார். அவருக்கு அரசியல்வாதிகள் துணையாக இருந்ததால் இது நாள்வரை தலைமறைவாக இருந்தார்.
நாடு முழுவதும் கொரோனா பரவுவதால், வெளியிடங்களில் தலைமறைவாக இருக்க முடியவில்லை, ஓட்டல்களில் அறை எடுத்தும் தங்க முடியாத நிலை ஏற்பட்டதால், இனி பதுங்க முடியாது என்று முடிவு செய்து சரண் அடைந்தார். விசாரணைக் கைதிகள் பலருக்கும் கரோனா அச்சத்தால் ஜாமீன் வழங்கப்படும் நிலையில், தற்போது சரணடைந்தால், சிறை செல்ல வேண்டியதில்லை என்று நினைத்து சரண் அடைந்துள்ளார். வணக்கம் சோமுவை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். அவரை ஏப்ரல் 9ம் தேதி வரை சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்பார்க்காத வணக்கம் சோமு அதிர்ச்சி அடைந்தார் என்றனர்.
கேரளா, பெங்களுர் என்று சுற்றித்திரிந்தவர் என்பதால் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொரோனோ பரிசோதனை செய்தனர். இந்த பரிசோதனை முடிந்தவுடன் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
- ஜெ. தாவீதுராஜா