அ.தி.மு.க.வின் பொதுக்குழு கடந்த ஜூலை 11-இல் கூடி, எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. அது 4 மாதத்திற்கு நீடிக்கும் என்றும், அதற்குள் மறுபடியும் பொதுக்குழு கூடி முறைப்படி அவரைத் தேர்ந்தெடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே மற்றொரு வழக்கில் உச்சநீதிமன்றம், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்தத் தடை விதித்திருக்கிறது. இந்தச் சூழலில் எடப்பாடியின் 4 மாத பதவிக்காலம் முடிந்துவிட்டது. அதனால் அடுத்து என்ன செய்வது என்ற பதைபதைப்போடு தன் வழக்கறிஞர்களுடன் அவர் ஆலோசனை நடத்திவருகிறார். அதேபோல் ஓ.பி.எஸ்.ஸின் அ,தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவியும் செப்டம்பர் 22 ஆம் தேதியோடு முடிவடைந்துவிட்டது. இதனால், ஓ.பி.எஸ்.ஸின் ஒருங்கிணைப்பாளர் பதவியும், இ.பி.எஸ்.ஸின் தற்காலிகப் பொதுச்செயலாளர் பதவியும் கேள்விக்குறியாகியுள்ளது. அதனால் அ.தி.மு.க.வின் அதிகார நாற்காலி அந்தரங்கத்தில் தொங்குகிறது.
இதுகுறித்து அதிமுகவினரிடம் பேசிய போது, காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை முடித்துக் கொண்டு டெல்லிக்குச் செல்ல, மதுரை ஏர்போர்ட்டுக்கு வந்த மோடியை, வழியனுப்பி வைக்க எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் வந்தனர். இருந்தும் ஒருவரை ஒருவர் பார்க்காத மாதிரியே நடந்துகொண்டனர். அதேபோல் மோடியுடன் 10 நிமிடமாவது தனியாகப் பேச வேண்டும் என்று இருவருமே காத்திருந்தனர். ஆனால் மோடியோ அதற்கு இடம் வைக்கவே இல்லை. போதாக்குறைக்கு, அவர்கள் இருவரின் கைகளையும் பிடித்து அவர் ஒன்றிணைக்க, எடப்பாடி அதிர்ந்து போய்விட்டார். இதன்மூலம் இருவரும் இணைந்திருக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை மோடி உணர்த்தினார். மோடியின் இந்தத் திடீர் செயலை ஓ.பி.எஸ்.ஸும் எதிர்பார்க்கவில்லை என்கின்றனர்.
மேலும், இதுகுறித்து அறிய எடப்பாடி தரப்பில் சிலரை விசாரித்தபோது, சென்னை திரும்பிய எடப்பாடியை அவர் அணியில் இருக்கும் மூத்த நிர்வாகிகளும், மா.செ.க்களும் சந்தித்தனர். அப்போது எடப்பாடி, மோடி என்ன செஞ்சார் தெரியுமான்னு கேட்க, ஆமாம் கேள்விப்பட்டோம். கட்சியின் 90 சதவீத நிர்வாகிகள் உங்கள் பக்கத்தில்தான் இருக்கிறோம் என்று நீங்க பல முறை நிரூபித்திருக்கிறீர்கள். அதோடு ஓ.பி.எஸ்.ஸை இனி அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ள முடியாது என்றும் நீங்கள் வெளிப்படையாகவே சொல்லிவிட்டீர்கள். அப்படியிருந்தும் அவரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என மோடி ஏன் நெருக்கடி தருகிறார்? இனி அவரை நீங்களாகப் போய் எங்கேயும் சந்திக்கக் கூடாது. தனிப்பட்ட சந்திப்புக்கு நேரம் ஒதுக்கினால் மட்டும் பாருங்க என ஆலோசனை சொல்லியிருக்காங்க. இதை ஏற்றுக்கொண்ட எடப்பாடி, அடுத்ததா சென்னை வந்த அமித்ஷாவைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டார் என்கின்றனர்.
மேலும் விசாரித்தபோது, மக்களின் அனுதாபம் ஓ.பி.எஸ்.ஸுக்கு இருப்பதாகவும், எடப்பாடியும் அவருடன் சேர்ந்தால் அ.தி.மு.க. பலமாக இருக்கும் என்று ஆடிட்டர் குருமூர்த்தியும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியும், பா.ஜ.க. தரப்புக்குத் தொடர்ச்சியாகத் தகவல் கொடுத்து வருகிறார்கள். அதோடு ஓ.பி.எஸ். தனது டெல்லி லாபி மூலம், மோடியிடம் தன்னை நல்ல மாதிரி பதியவைத்திருக்கிறார். இதையெல்லாம் அறிந்து ஓ.பி.எஸ்., ரவீந்திரன் துரைசாமி மீது கடுப்பில் இருக்கும் எடப்பாடி, அவர்களைத் தன் மகன் மிதுன் தலைமையில் இயங்கும் ஐ.டி. விங்க் மூலம் கடுமையாக அட்டாக் பண்ணி வருகிறார் என்கின்றனர்.