அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் நம்பகத்தன்மை அற்று ஒருவர் இருப்பார் என்றால் அது பண்ருட்டி ராமச்சந்திரன் தான். எங்கள் பொதுச்செயலாளரை நம்பகத்தன்மையற்றவர் என்று அவர் சொன்னதன் காரணமாக, அவர் எப்படி, தான் ஏற்றுக்கொண்ட தலைவர்களிடத்திலேயே நம்பகத்தனையோடு இருந்தார் என்பதை சொல்லவேண்டியது என் கடமை. கலைஞர் ஆட்சியில் இவர் அங்கு இருந்தார். ஆனால் அன்று, கலைஞருக்கு இவர் நம்பிக்கையானவராக இல்லை. அங்கு இருந்துவிட்டு பிறகு எம்.ஜி.ஆரிடம் வந்தார். பிறகு எம்.ஜி.ஆரிடத்திலும் நம்பிக்கையானவராக இல்லை. பிறகு ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்தபோது இங்கு அவரிடத்தில் வருகிறார். அங்கு நால்வர் அணியை உருவாக்கி ஜெயலலிதாவை கழித்துவிட்டு காங்கிரஸோடு இணைய முயற்சி செய்கிறார்.
என்.டி. ராமா ராவ் ஆந்திரத்தின் முதலமைச்சராக இருந்தபோது அவரின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஸ்கர் ராவ் என்பவர் திட்டமிட்டார். அந்த பாஸ்கர் ராவோடு, பண்ருட்டி ராமச்சந்திரனை ஒப்பிட்டு பேசுவார்கள். நம்பிக்கைத் துரோகியைப் பற்றி சொல்லும்போது பண்ருட்டி ராமச்சந்திரனை உதாரணத்திற்கு காட்டக் கூடிய நிலையில்தான் அவர் இருந்திருக்கிறார்.
இதுமட்டுமல்லாமல் பா.ம.க.வுக்கு சென்று எம்.எல்.ஏ.வாகி சட்டமன்றத்திற்கு யானையில் வந்தார். அந்தத் தலைவரிடத்திலும் அவர் விஸ்வாசமாக இல்லை. பிறகு அங்கிருந்து தே.மு.தி.க.வுக்கு சென்று எம்.எல்.ஏ.வானார். அங்கு விஸ்வாசமாக இல்லை. மீண்டும் ஜெயலலிதாவிடம் மண்டியிட்டு எங்களிடத்திலேயே வந்தார். அப்போதும் அவர் விஸ்வாசமாக இல்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை கட்டுக்கோப்பாக கொண்டுவர கடுமையாக நாங்கள் முயற்சி செய்து கொண்டிருந்தபோது, கெடுப்பதற்கு முயற்சி செய்தார். இப்படியான பண்ருட்டி ராமச்சந்திரன், ஒரு நம்பிக்கைத் துரோகியிடத்தில் உட்கார்ந்துகொண்டு ‘எனக்கு நம்பிக்கைக்குரியவர் ஓ.பி.எஸ்.’ என்று சொல்கிறார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்த இயக்கத்தை கபளீகரம் செய்த சசிகலா இந்த இயக்கத்தில் இருக்கக் கூடாது என நான் போராடினேன். அப்போது அவர், தர்மயுத்தம் நடத்தபோகிறேன் என்று வந்தார். நானும் அவருடன் சென்றேன். அப்போது ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவர் (சசிகலா) மீது குற்றஞ்சாட்டி அவர் மீது பல்வேறு வகையான விமர்சனம் செய்தார். இப்போது கால சூழ்நிலை மாறியதும் அவரையே தலைவராக ஏற்றுக்கொள்ள முயற்சி செய்கிறார். சுய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தங்களின் கொள்கைகளை விட்டு அதில் ஆதாயம் தேடக்கூடிய இரு தலைவர்கள் ஒன்றாக சேர்ந்திருக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வரும் தவறான கருத்துகளின் தாக்கம் காரணமாக மேடையில் உண்மை நிலை மறந்து சொல்வது இயற்கை. அப்படித்தான் முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன் சொல்லியிருக்கலாம். பொதுச்செயலாளர் இன்று எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். 2026ல் அதிமுக ஆட்சி கட்டிலில் வரவேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு. இதில் பா.ஜ.க. எங்கிருந்து வருகிறது. இவர்களாக கற்பனை செய்துகொண்டு எங்கோ இருக்கிறவர்கள் நாங்கள் வருகிறோம் என்று சொல்கிறார்கள்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களை மக்கள் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளட்டும். எச். ராஜா, கண்மூடித்தனமாக, கீழ்த் தரமாக பேசுகிறார். நாங்கள் விரல் காட்டி எம்.எல்.ஏ.வான எச்.ராஜா எப்படி இப்படியெல்லாம் பேசலாம்” என்றார்.