தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவி ஏப்ரல் மாதம் முடியும் நிலையில் உள்ளது. இதனால் திமுக, அதிமுக கட்சிகளில் ராஜ்யசபா எம்.பி பதவிக்கு கடும் போட்டி நிலவி வருவதாக கூறுகின்றனர். அ.தி.மு.க மற்றும் தி.மு.க.வுக்கு புதிதாக தலா 3 எம்.பி. பதவிகள் கிடைக்க உள்ளது. அந்த இடங்களுக்கு இரண்டு கட்சியிலும் நிர்வாகிகள் மத்தியில் போட்டி உருவாகி வருகிறது. ஆளும்கட்சியில் தன் ஆதரவாளர்களுக்கு 3 சீட்டையும் ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி விரும்பவதாக சொல்லப்படுகிறது. அதில் ஒன்றையாவது தன் தரப்புக்கு ஒதுக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். எதிர்பார்க்கிறார் என்கின்றனர்.
இந்த நிலையில் கூட்டணி கட்சியான தேமுதிக ஒரு ராஜ்யசபா ஒதுக்க வேண்டும் என்று அதிமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. அப்படி கொடுக்க மறுத்தால் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியை விட்டு வெளியேறவும் தயாராக இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மற்றொரு கூட்டணி கட்சி தலைவரான ஜி.கே.வாசனும் அதிமுகவிடம் இருந்து ஒரு ராஜ்யசபா சீட் வாங்க வேண்டுமென்ற முனைப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது.பாஜகவின் முழு ஆதரவு ஜி.கே.வாசனுக்கு இருப்பதால் அவருக்கு அதிமுகவிடம் இருந்து ராஜ்யசபா சீட் வாங்கி கொடுத்து மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற வைக்க பாஜக முயன்று வருவதாக சொல்கின்றனர். இதனால் 3 ராஜ்யசபா சீட்டில் இரண்டு சீட்டுக்களை பெற கூட்டணி கட்சிகள் அழுத்தும் கொடுத்து வருவதால் எடப்பாடி அப்செட்டில் இருப்பதாக சொல்கின்றனர். மேலும் இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி பாதிக்கப்படுமா என்ற பயத்திலும் அதிமுக தலைமை இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுகவில் இருக்கும் சீனியர்கள் தங்களுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருக்கும் நிலையில் கூட்டணி கட்சிகளும் கேட்பதால் அதிமுக சீனியர்கள் கடுப்பில் இருப்பதாகவும் சொல்கின்றனர்.