அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில், அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொள்ள, இன்று (09/01/2021) காலை 8.50 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இன்று காலை 11 மணிக்கு நடக்கிறது.
அ.தி.மு.க.வில் செயற்குழு உறுப்பினர்கள் 300 பேர், பொதுக்குழு உறுப்பினர்கள் 2,000 பேர் உள்ளனர். கரோனா பரவல் காரணமாக இவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்து அதன் முடிவுகளுடன் வரவேண்டும் என அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.
இதனால், காலை முதல் அ.தி.மு.க.வினர் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்திற்கு வந்துகொண்டிருக்கின்றனர். வழியெங்கிலும் அ.தி.மு.க.வின் பேனர்கள், பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வழி நெடுகிலும் சாலைகளில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் குத்து நடனம் ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, காலை வேலைக்கு செல்வோர், மருத்துவமனைக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளானார்கள். மதுரவாயிலில் அ.தி.மு.க. பகுதி செயலாளர் தேவதாஸ் ஏற்பாட்டில், கோட்டையில் எடப்பாடி பழனிசாமி இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்ட பேனரும் வைக்கப்பட்டுள்ளது.